அரியலூர்
100 நாள் வேலை வழங்கக்கோரி பெண்கள் மனு
|100 நாள் வேலை வழங்கக்கோரி பெண்கள் மனு அளித்தனர்.
குறை தீர்க்கும் நாள் கூட்டம்
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை தாங்கினார். கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அளித்த மனுவில், செந்துறை தாலுகா, அயன்தத்தனூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு செல்லும் வழியில் சாலை மிகவும் மோசமாக உள்ளது. அதனை சீரமைக்க வேண்டும். அஸ்தினாபுரம் பொதுமக்கள் இலவச வீட்டுமனை கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். சாலையக்குறிச்சியில் மயான கொட்டகை அமைத்து தர வேண்டும். அங்கனூர் கிராமம் அய்யனார் கோவில் தெரு சாலை மிகவும் சேதமடைந்து உள்ளது. அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கூறியிருந்தனர்.
100 நாள் வேலை
ஆண்டிமடம் தாலுகா, புதுக்குடியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பெண்கள் அளித்த மனுவில், 100 நாள் வேலைத்திட்டத்தில் எங்கள் பகுதியில் உள்ள அனைவருக்கும் வேலை தராமல் 220 பேருக்கு மட்டுமே வேலை கொடுக்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால் ஒரு குடும்பத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் உள்ள யாரேனும் இறந்துவிட்டால், அவர்கள் பெயரை நீக்கிவிட்டு அந்த குடும்பத்தில் வேறு யாருக்காவது வேலை கொடுக்கப்படும் என்று தெரிவிக்கின்றனர். நாங்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே கஷ்டப்படுவதால் எங்களுக்கும் வேலை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
மேலும் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 470 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன.