பெரம்பலூர்
இலவச வீட்டு மனை பட்டா கேட்டு அகரம்சீகூர் கிராம மக்கள் மனு
|இலவச வீட்டு மனை பட்டா கேட்டு அகரம்சீகூர் கிராம மக்கள் மனு அளித்தனர்.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது அகரம்சீகூர் கிராம மக்களில் சிலர் வந்து கலெக்டரை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர்.
அதில், நாங்கள் 50 ஆண்டுகளாக அரசு நிலத்தில் வசித்து வரும் வீட்டிற்கு முறையாக வீட்டு வரி உள்ளிட்டவை கட்டி வருகிறோம். தற்போது அந்த நிலத்தை அரசு கையகப்படுத்துவதாக தெரிகிறது. இதனால் எங்களை வீட்டை காலி செய்யுமாறு அலுவலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். வீட்டை காலி செய்தால் நாங்கள் எங்கு செல்வது என்று தெரியவில்லை. எனவே நாங்கள் குடியிருக்கும் வீட்டிற்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.
பணி தொகை வழங்கக்கோரி...
எளம்பலூர் சமத்துவபுரத்தை சேர்ந்த 3 குடும்பத்தினர் வந்து கலெக்டரிடம் கொடுத்த மனுவில், சமத்துவபுரத்தில் வசிக்கும் 4 குடும்பங்களின் இல்லத்தை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் சீரமைக்க ஆணை வந்தது. நாங்களும் வட்டிக்கு கடன் வாங்கி வீடுகளை சீரமைத்தோம். தற்போது சீரமைக்க ஆணையை ரத்து செய்து ஆணை வந்துள்ளது. மேலும் தமிழக அரசின் பொதுத் தணிக்கை குழு ஆய்வின்போது எங்களுக்கு பணி தொகை வழங்க அலுவலர்களை அறிவுறுத்தினர். ஆனால் பணி தொகை வழங்கப்படவில்லை. எனவே சீரமைக்க ஆணை ரத்து செய்து வந்த ஆணையை ரத்து செய்து பணி தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.
பெரம்பலூர் வடக்கு புதிய மதனகோபாலபுரத்தில் வசிக்கும் பெண்கள் சிலர் வந்து கொடுத்த மனுவில், எங்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர். பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே காந்தி சிலை தென்புறம் உள்ள கட்டிட உரிமையாளர்கள் கொடுத்த மனுவில், நகராட்சி சாலையில் செய்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தார் சாலை அமைத்து கொடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.
மொத்தம் 297 மனுக்கள்
வேப்பந்தட்டை தாலுகா, பூலாம்பாடி கிராமத்தில் பாலக்காடு பகுதியில் வசிக்கும் முருகேசன் மனைவி கஸ்தூரி கொடுத்த மனுவில், எனக்கு விவசாய நிலத்தை கிரையம் செய்து தருவதாக நம்ப வைத்து ஒரு குடும்பத்தினர் லட்சக்கணக்கில் பணம் பெற்று கொண்டனர். ஆனால் அவர்கள் நிலத்தை கிரையம் செய்து தராமல் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை கிரையம் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார். கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 297 மனுக்களை கலெக்டர் கற்பகம் பெற்றார். இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லலிதா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சரவணன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.