தென்காசி
குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு
|தென்காசியில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.
தென்காசியில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, கலால் உதவி ஆணையர் ராஜ மனோகரன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சங்கரநாராயணன், தனித்துணை கலெக்டர் ஷீலா, ஆதிதிராவிடர் நல அலுவலர் நடராஜன், வழங்கல் அலுவலர் சுதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள், பட்டா மாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட 375 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. இந்த மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா? என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் கலெக்டர் அறிவுறுத்தினார்.
குடிநீர் பிரச்சினை
தலைவன் கோட்டை கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சுப்பிரமணியன் என்பவர் தலைமையில் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், தலைவன் கோட்டை பஞ்சாயத்து மூலமாக கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய நீர்த்தேக்க தொட்டியினை மேட்டுப்பகுதியான தலைவன்கோட்டையில் தற்போது இயங்கி வரும் நீர்த்தேக்க தொட்டி அருகில் கட்டிக் கொடுக்க வேண்டும். இதனால் குடிநீர் பிரச்சினை தீரும் என கூறப்பட்டுள்ளது.
திருவேங்கடம் தாலுகா வாகைகுளம் பஞ்சாயத்து கிராம மக்கள் கொடுத்துள்ள மனுவில், நாலுவாசன்கோட்டையில் அமைந்துள்ள நிறைகுலத்தான் கண்மாய், ஊருணி கண்மாய் ஆகியவற்றில் உள்ள இடங்களில் சுமார் 1,000 மரக்கன்றுகளுக்கு மேல் நட்டு வைத்துள்ளோம் அந்த மரக்கன்றுகளுக்கு தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது. ஊருணி கண்மாயில் ஊராட்சி சார்பாக வட்டக் கிணறு வெட்டப்பட்டுள்ளது. அதில் ஓரளவு தண்ணீர் உள்ளது. அந்த கிணற்றில் தேங்கி நிற்கும் தண்ணீரை மரக்கன்றுகளுக்கு கிடைக்குமாறு செய்ய வேண்டும். கூட்டுக் குடிநீரும் எங்கள் கிராமத்திற்கு சரிவர கிடைப்பதில்லை. மேலும் குருவிகுளம் ஒன்றியத்தில் அமைந்துள்ள அனைத்து கிராமங்களிலும் சுடுகாடு மற்றும் இடுகாட்டுக்கு தண்ணீர் தொட்டி, சாலை வசதி, மின் இணைப்பு, எரிமேடை ஆகிய அனைத்து வசதிகளும் உள்ளன. ஆனால் எங்கள் கிராமத்தில் எந்த ஒரு வசதியும் இல்லை. மற்ற கிராமங்களை போல் நாலுவாசன்கோட்டை கிராமத்திற்கு செய்து தர வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
பஞ்சாயத்து கட்டிடம்
சங்கரன்கோவில் தாலுகா குவளைக்கண்ணி பஞ்சாயத்து பொதுமக்கள் கொடுத்துள்ள மனுவில், பஞ்சாயத்துக்கு உட்பட்ட 3 கிராமங்கள் உள்ளன. தாய் கிராமமான குவளைகண்ணியில் பஞ்சாயத்து கட்டிடம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான கட்டுமான பணியை தனிநபர்கள் சிலர் தடை செய்கிறார்கள். இந்த குறைபாடுகளை கலைந்து அங்கு கட்டுமான பணியை தொடங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
சேர்வைக்காரன்பட்டி செக்கடியூரை சேர்ந்த மரகதம் மற்றும் கிருஷ்ணம்மாள் ஆகியோர் கொடுத்துள்ள மனுவில், தங்களது ஊரில் ஒரு பெண்ணிடம் கடன் வாங்கினோம். அதற்கு அதிகமான வட்டி கேட்டு தொல்லை செய்கிறார். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
நலத்திட்ட உதவிகள்
கூட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட்டுகளையும், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 6 பேருக்கு ரூ.39 ஆயிரம் மதிப்பிலான இலவச தேய்ப்பு பெட்டிகளையும் கலெக்டர் துரை ரவிச்சந்திரன் வழங்கினார்.