ராமநாதபுரம்
சப்-கலெக்டரிடம் கிராம நிர்வாக அலுவலர்கள் மனு
|பரமக்குடியில் சப்-கலெக்டரிடம் கிராம நிர்வாக அலுவலர்கள் மனு அளித்தனர்.
பரமக்குடி,
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்டம் சார்பில் மாவட்ட தலைவர் நம்புராஜேஸ், செயலாளர் சரவணன், பொருளாளர் பாலகிருஷ்ணன், மாநில அமைப்பு செயலாளர் அசோக்குமார் தலைமையில் பரமக்குடி வட்ட தலைவர் கண்ணன், செயலாளர் பெரியசாமி, பொருளாளர் ஜெகராயன் ஆகியோர் பரமக்குடி சப்- கலெக்டர் அப்தாப் ரசூலிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அதில் பாரத பிரதமரின் பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பணம் பெற கிராம நிர்வாக அலுவலர்கள் தான் அனைத்து பணிகளையும் செய்து முடித்து கொடுத்தனர். பிற மாநிலங்களை விட தமிழ்நாடு சிறந்த மாநிலம் என விருது பெற்றது. ஆனால் அந்த பணிகளை செய்ய சொல்லிய வேளாண்மை துறைக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இதனால் கிராம நிர்வாக அலுவலர்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். தற்போது மீண்டும் வேளாண்மை துறை செய்ய வேண்டிய வேளாண் இருப்பு பணியை கிராம நிர்வாக அலுவலர்கள் செய்ய வற்புறுத்தி வருகின்றனர். ஆகையால் அந்த கிராம நிர்வாக அலுவலர்கள் புறக்கணிக்கவில்லை. அதற்குரிய டோக்கன்களை கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் வழங்கப்படும். அதைக் கொண்டு துறையினர் லாக்கினில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளனர். இந்த கோரிக்கை மனு அளிக்கும் நிகழ்ச்சியில் 80-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.