< Back
மாநில செய்திகள்
வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி இருளரின மக்கள் மனு
அரியலூர்
மாநில செய்திகள்

வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி இருளரின மக்கள் மனு

தினத்தந்தி
|
6 Dec 2022 12:40 AM IST

வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி இருளரின மக்கள் மனு அளித்தனர்.

தாமரைக்குளம்:

மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ராமநாதன் தலைமையில் வந்த இருளர் இன மக்கள், கலெக்டரிடம் ஒரு மனு அளித்தனர்.

அதில், உடையார்பாளையம் தாலுகா இளையபெருமாள் ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளிவிடை இருளர் தெருவில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு 3 தெருக்களில் 71 இருளர் குடும்பத்தினர் வசித்துள்ளனர். பின்னர் நடைபெற்ற ஒரு கொலை சம்பவத்தால் அவர்கள் உயிரை காப்பாற்றி கொள்வதற்காக அந்த ஊரைவிட்டு வெளியேறி கடலூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் உள்ள நீர்நிலை ஓடை புறம்போக்கு பகுதியில் வசித்து வருகின்றனர்.

வீட்டுமனை பட்டா

தற்போது கோர்ட்டு உத்தரவின்படி நீர்நிலை புறம்போக்கு பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் நிலையில், அப்பகுதியில் வசித்து வரும் இருளர் இன குடும்பத்தினரையும் அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. எனவே இருளர் இன மக்கள் ஏற்கனவே வசித்து வந்த பள்ளிவிடை பகுதியில் மீண்டும் வசிப்பதற்கு, நாங்கள் வாழ்ந்து வந்த இடத்திற்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி

கோக்குடி கிராமத்தை சேர்ந்த முக்கியஸ்தர்கள் அளித்த மனுவில், புனித அந்தோணியார் பொங்கல் விழாவை முன்னிட்டு தை மாதம் 5-ம் நாள் அரசு அனுமதியுடன் ஜல்லிக்கட்டு நடைபெற்று வந்தது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாகவும், கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதாலும், இந்த ஆண்டு கோக்குடி ஜல்லிக்கட்டு தொடர்பாக வழக்கு நிலுவையில் இருந்ததாலும் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.

தற்போது வழக்கில், பாரம்பரிய முறைப்படி ஜல்லிக்கட்டை தொடர்ந்து நடத்திக்கொள்ள சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பாணையும் பெறப்பட்டுள்ளது. எனவே வருகிற 2023-ம் ஆண்டு ஜனவரி 19-ந் தேதி புனித அந்தோணியார் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழா நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.

மேலும் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் அளித்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், இந்த மனுக்கள் குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Related Tags :
மேலும் செய்திகள்