கோடநாடு கொள்ளை வழக்கில் கைதானவர் மனு; போலீஸ் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
|ஜாமீன் நிபந்தனையை தளர்த்த கோரி கோடநாடு கொள்ளை வழக்கில் கைதான மனோஜ் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை,
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், கேரளாவைச் சேர்ந்த சயான், மனோஜ் உள்பட பலரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் மனோஜ், நீலகிரியிலேயே தங்கியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் நீலகிரி மாவட்ட ஜாமீன் வழங்கியது. பின்னர், கேரள மாநிலம் திருச்சூரில் தங்கியிருந்து வாரத்தில் 2 நாட்கள் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனையை மாற்றி அமைத்தது.
இந்த நிபந்தனையை தளர்த்தக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனோஜ் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தற்போது வாரந்தோறும் திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் திருச்சூர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறேன். உடல்நலக்குறைவு காரணமாகவும், கூலி வேலைக்கு செல்வதாலும் இந்த நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, போலீஸ் தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 9-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.