கரூர்
வணிக வரித்துறை துணை ஆணையரிடம் வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் மனு
|டெஸ்ட் பர்ச்சேஸ் நடைமுறையை 6 மாதங்கள் நிறுத்தி வைக்கக்கோரி வணிக வரித்துறை துணை ஆணையரிடம் வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் மனு அளித்தனர்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாவட்ட தலைவர் ராஜூ, செயலாளர் வெங்கட்ராமன் தலைமையில் மாவட்ட வணிகவரித்துறை துணை ஆணையரிடம் நேற்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- வணிகவரித்துறையினால் கடந்த மார்ச் மாதத்தில் சில்லறை கடைகளில் ஆய்வு செய்வது சம்பந்தமாகவும், டெஸ்ட் பர்ச்சேஸ் செய்வது (சோதனை கொள்முதல்) சம்பந்தமாகவும் அறிவிப்புகள் வெளியானபோதே தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தமிழக அனைத்து வணிகர்களின் சார்பாக தனது கருத்துக்களையும், எதிர்ப்பையும் பதிவு செய்திருந்தது. மீண்டும் டெஸ்ட் பர்ச்சேஸ் சம்பந்தமான வணிகவரித்துறையின் அறிவிப்பு 6-9-2022-ந் தேதி வெளியிடப்பட்டு, அதன் அடிப்படையில் வணிகவரித்துறை அதிகாரிகள் சில்லறை வணிகம் செய்யும் வணிகர்களிடம் பொருட்கள் வாங்கி அதை டெஸ்ட் பர்ச்சேஸ் என குறிப்பிட்டு அதற்கு அபராதமாக ரூ.20 ஆயிரம் வரை வசூலிப்பதாகவும் புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன.அனைத்து சில்லறை கடைக்காரர்களும் தாங்கள் பொருட்களை வாங்கும்போது அதற்கான வரி செலுத்தியே பொருட்களை வாங்கி வந்து, அதை பொதுமக்களுக்கு விற்பனை செய்கிறார்கள். பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் அப்பொருட்கள் ஏற்கனவே வரி விதிப்புக்குட்பட்டது. ஆனாலும் வணிகவரித்துறை அதிகாரிகள், சில்லறை கடைகளில் டெஸ்ட் பர்ச்சேஸ் என்ற பெயரில் பொருட்களை வாங்கி, அதற்கு ரசீது அளிக்கப்படவில்லை என்று கூறி அபராதம் விதிக்கும் முறை ஏற்புடையது அல்ல. இது சில்லறை சிறு, குறு வணிகர்களின் வாழ்வாதாரத்தையே மிகப்பெரும் கேள்விக்குறியாக்கும் செயலாகும்.
வரி ஏய்ப்பு செய்கிறவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனும் கருத்துக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு எதிரானது அல்ல. குறிப்பாக வெளிமாநிலங்களில் இருந்து கனரக வாகனங்கள், துறைமுக கண்டெய்னர்கள் மூலம் கொண்டு வரப்படும் நிலையில் அவற்றையும், அவற்றை கொண்டு வருகின்ற நிறுவனங்களையும் ஆய்வு செய்தால் மட்டுமே வரி ஏய்ப்பு முழுமையாக தடுக்கப்படும்.
எனவே வரி ஏய்ப்பில் ஈடுபடுகின்ற உற்பத்தியாளர்கள், தயாரிப்பாளர்கள், கனரக வாகன உரிமையாளர்கள் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுத்து வரி ஏய்ப்பை முழுமையாக தடுத்திட ஆவண செய்திட வேண்டும். அதற்காக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு துணை நிற்கும் என்பதை உறுதி செய்து, சில்லறை சிறு, குறு வணிகர்கள் பாதிக்காத வகையில் அரசு நடவடிக்கை அமைந்திட பேரமைப்பு வலியுறுத்துகிறது. எனவே 6 மாதங்கள் டெஸ்ட் பர்ச்சேஸ் நடைமுறையை நிறுத்திவைத்து, வணிகர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அதன்பிறகே படிப்படியாக செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.