கரூர்
தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அ.தி.மு.க.வினர் கலெக்டரிடம் மனு
|குடகனாற்றில் சுகாதாரமற்ற தண்ணீர் திறந்துவிட்ட தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அ.தி.மு.க.வினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
கோரிக்கை மனு
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் பிரபுசங்கரிடம், முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், அ.தி.மு.க. மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்ற தலைவர் சாந்திசேகர் சில கோரிக்கை மனுக்களை அளித்தார். அந்த மனுக்களில் கூறியிருப்பதாவது:-
ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட 19 கிராமங்களுக்கு பெரியார்நகர் அமராவதி ஆற்றில் உள்ள நீரூற்று கிணற்றின் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 7 நாட்களாக அமராவதி ஆற்றில் உள்ள நீரூற்று கிணற்றில் உள்ள நீர் உவர்ப்பு தன்மையாகவும் நீரின் நிறம் மாறியும் உள்ளதால், அக்குடிநீரினை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.
நீரின்றி வறண்டு வருகிறது
இதில் நீரின் காரத்தன்மை நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருப்பதால் இந்த நீர் குடிப்பதற்கு உகந்ததல்ல என சான்று அளித்துள்ளனர். மேலும் குடகனாற்றில் இருந்து சுகாதாரமற்ற தண்ணீர் திறந்துவிடப்பட்ட தொழிற்சாலைகளை கண்டறிந்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது அமராவதி ஆற்றில் நீர்வரத்து இல்லாத நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலமும் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே தனிநபர்கள் அமராவதி ஆற்றில் இருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதை தடை செய்ய ஆவன செய்ய வேண்டும்.
அனுமதி மறுப்பு
7 ஆண்டுகளுக்கு மேலாக கரூர் மாநகராட்சிக்கு மாதம் ரூ.10 ஆயிரம் செலுத்தி ஊராட்சியில் சேகரமாகும் குப்பைகளை கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் கொட்டி வரப்பட்டது. தற்போது சில நாட்களாக கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் கொட்டுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. எனவே ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி கோவை மற்றும் ஈரோடு சாலைகளில் குப்பைகள் மற்றும் கழிவுகள் அதிகளவில் சேர்ந்து துர்நாற்றம் ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
எனவே பொதுமக்கள் நலன்கருதி ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் சேகரமாகும் குப்பைகளை கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் கொட்டுவதற்கு அனுமதி வழங்கிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அப்போது மாவட்ட அவைத்தலைவர் திருவிகா, ஆலம் தங்கராஜ் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.