கடலூர்
இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் குறைகேட்பு கூட்டத்தில் 2 கிராம மக்கள் மனு
|கடலூரில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என 2 கிராமங்களை சேர்ந்த மக்கள் மனு அளித்துள்ளனர்.
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் வாராந்திர பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்கள் பெற்றார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக சுமார் 450 மனுக்களை அளித்தனர். அதனை பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர், மனுக்களை தீர ஆராய்ந்தும், உரிய விசாரணை நடத்தியும் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
முன்னதாக விருத்தாசலம் அருகே பெரியகோட்டிமுளை சிறுவரப்பூர் காலனி பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், எங்கள் ஊரில் 130 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு மனை பட்டா ஏதும் இல்லாததால், ஒவ்வொரு வீட்டிலும் 3, 4 குடும்பத்தினர் கடும் இடநெருக்கடிக்கு மத்தியில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசிக்கின்றோம். அதனால் எங்கள் ஊரில் உள்ள புறம்போக்கு நிலத்தை ஆய்வு செய்து, அதில் எங்களுக்கு தனித்தனியே மனை பட்டா வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
வீட்டுமனை பட்டா
இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வேப்பூர் வட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் மாவட்ட செயலாளர் மாதவன், வட்டக் குழு உறுப்பினர் சாமிதுரை ஆகியோர் முன்னிலையில் நல்லூர் கிராம மக்கள், மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகனிடம் அளித்த மனுவில், நல்லூர் கிராமத்தில் நாங்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறோம். அதனால் எங்களுக்கு இலவச வீட்டு மனை மற்றும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
அந்த மனுக்களை பெற்றுக் கொண்ட வருவாய் அலுவலர், அதன் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.