கரூர்
பணத்தை மீட்டு தரக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு
|பணத்தை மீட்டு தரக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
கடவூர் வட்டம், சேர்வைகாரன்பட்டியை சேர்ந்த டேனியல் பிரசாந்த் என்பவர் கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- நான் எனது மனைவியின் பெயரில் தரகம்பட்டியில் இயங்கி வரும் தனியார் சிட்பண்ட்ஸ் நிறுவனத்தில் ரூ.5 லட்சம் சீட்டில் இணைந்து கடந்த 10 மாதங்களாக பணம் செலுத்தி வந்தேன். எனக்கு பணம் தேவை இருந்ததால், சீட்டுதொகையை தருமாறு அவர்களிடம் கேட்டேன். அவர்கள் இழுத்தடித்தார்கள்.
இதனால் அவர்களின் மீது சந்தேகம் ஏற்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட துறையில் விசாரித்தேன். அந்த பெயரில் எந்த நிறுவனமும் பதிவாகவில்லை என தெரிவித்தனர். இதனால் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். கடந்த 10 மாதங்களாக சுமார் ரூ.1 லட்சத்து 69 ஆயிரம் சீட்டில் கட்டியுள்ளேன். எனவே இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து பணத்தை திரும்ப பெற்று தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.