திருச்சி
மாணவ-மாணவிகளுக்கு வசதியாக உரிய நேரத்தில் பஸ்கள் இயக்க வேண்டும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு
|மாணவ-மாணவிகளுக்கு வசதியாக உரிய நேரத்தில் பஸ்கள் இயக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.
மாணவ-மாணவிகளுக்கு வசதியாக உரிய நேரத்தில் பஸ்கள் இயக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை மாவட்ட வருவாய் அதிகாரி அபிராமி தலைமையில் நடைபெற்றது. இதில் இந்து மக்கள் கட்சி புறநகர் மாவட்ட தலைவர் ராஜா என்கிற வீரசிவமணி, இளைஞரணி செயலாளர் பெரியசாமி தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனுவில், மணப்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் சட்டவிரோத மதுவிற்பனை நடக்கிறது. திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறை, மஞ்சம்பட்டி, நொச்சிமேடு பகுதியில் டாஸ்மாக் கடைகளில் மதுஅருந்திவிட்டு வரும் நபர்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகிறார்கள். ஆகவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தரகம்பட்டியில் இருந்து பழையகோட்டை, மஞ்சம்பட்டி வழியாக மணப்பாறை செல்வதற்கு காலை 6.30 மணிக்கு பஸ் இயக்கப்படுகிறது. அந்த பஸ்சை விட்டால் காலை 10.40 மணிக்கு தான் பஸ் இயக்குகிறார்கள். இதனால் பள்ளி குழந்தைகள் காலை 6 மணிக்கே பள்ளி செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் காலை உணவு உண்ணாமல் மயக்கம் அடைகிறார்கள். ஆகவே மாணவ-மாணவிகளுக்கு வசதியாக காலை 8.30 மணிக்கும், மாலை 5 மணிக்கும் பஸ்கள் இயக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.
புதிய டாஸ்மாக்
கடை திறக்க எதிர்ப்பு
திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் உஸ்மான்அலிதெரு பொதுமக்கள் அளித்த மனுவில், டி.வி.எஸ்.டோல்கேட்டில் இருந்து தஞ்சை செல்லும் பைபாஸ் ஒருவழிச்சாலை சர்வீஸ்ரோட்டில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க ஏற்பாடு நடக்கிறது. ஏற்கனவே அதேபகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது.
பின்னர் உச்சநீதிமன்ற உத்தரவின்படி அந்த கடை மூடப்பட்டது. தற்போது மீண்டும் அங்கு டாஸ்மாக் கடை திறந்தால் விபத்துகள் ஏற்படுவதோடு, பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படும். ஆகவே அங்கு புதிய டாஸ்மாக் கடை திறக்க அனுமதிக்கக்கூடாது என்று கூறி இருந்தனர்.
கணவர் 4-வது திருமணம்
நவல்பட்டு அண்ணாநகரை சேர்ந்த மகேஸ்வரி அளித்த மனுவில், தஞ்சை மாவட்டம் பாபநாசம் சத்தியமங்கலத்தை சேர்ந்த ஒருவருடன் கடந்த 2010-ம் ஆண்டு எனக்கு திருமணம் நடந்தது. கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் என்னுடன் சண்டை போட்டுவிட்டு கணவர் சென்றுவிட்டார். இந்தநிலையில் கடந்த மே மாதம் வேறொரு பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டதாக கேள்விப்பட்டேன். இது தொடர்பாக விசாரித்தபோது, எனது கணவர் ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்தது தெரியவந்தது. அதன்பிறகு 3-வதாக என்னை திருமணம் செய்துள்ளார். தற்போது 4-வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்ததும் தெரியவந்தது. இது குறித்து திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆகவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.