< Back
மாநில செய்திகள்
மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி பார்வையற்றவர்கள் மனு
திருச்சி
மாநில செய்திகள்

மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி பார்வையற்றவர்கள் மனு

தினத்தந்தி
|
6 Sept 2022 2:12 AM IST

மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி பார்வையற்றவர்கள் மனு அளித்தனர்.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் பிரதீப்குமார் தலைமை தாங்கினார். அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தேசிய பார்வையற்றோர் கூட்டமைப்பு சார்பில் அளித்த மனுவில், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உள்பட அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் மாதாந்திர உதவித்தொகையை ரூ.1000-ல் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

குடும்பத்துடன் தர்ணா

திருச்சி காட்டூரை சேர்ந்தவர் கனகராஜ். தொழிலாளியான இவர் நேற்று காலை தனது 3 குழந்தைகள் மற்றும் மனைவியுடன் கலெக்டர் அலுவலகத்தில் அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் கனகராஜிடம் விசாரணை நடத்தி மனு அளிக்க அழைத்து சென்றனர். அவர் அளித்த மனுவில், எனது வீட்டுக்கு அருகே வசித்து வருபவருடன் இடப்பிரச்சினை இருந்து வருகிறது. இதனால் எனது நிலத்தை அளந்து தரும்படி திருவெறும்பூர் நில அளவைத்துறை அலுவலகத்தில் மனு அளித்தேன்.

ஆனால் எனக்கு இடத்தை அளந்து தரவில்லை. ஆனால் மற்றொரு தரப்பினருக்கு மட்டும் போலீசார் உதவியுடன் நிலத்தை அளந்து கொடுத்துள்ளனர். தற்போது அந்த இடத்தில் காம்பவுண்டு சுவரை கட்டி விட்டனர். ஆகவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

அழுகிய பயிர்கள்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணுவுடன் விவசாயிகள் அழுகிய உளுந்து பயிர்களுடன் வந்து மனு அளித்தனர். அதில், தெற்கு சேர்பட்டியில் உள்ள 6 ஏக்கரில் ரூ.1½ லட்சம் செலவு செய்து உளுந்து சாகுபடி செய்தேன். தொடர் மழையால் உளுந்து செடிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் உளுந்து விதையை அறுவடை செய்ய 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை அனுப்பி உதவ வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

Related Tags :
மேலும் செய்திகள்