அரியலூர்
வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மனு
|வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மனு அளிக்கப்பட்டது.
தாமரைக்குளம்:
வாய்க்கால்களில் ஆக்கிரமிப்பு
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், கடுகூர் ஊராட்சிக்கு உட்பட்ட தலையாரிகுடிகாடு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் கிராமத்தில் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சாலைக்குறிச்சி கிராமத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் புதி ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதால், மழைக்காலங்களில் பெய்யும் நீரானது கிராமத்தில் உட்புகுந்து வீடுகள், பள்ளிகள் மற்றும் விவசாய நிலங்களில் புகுவதால், பயிர்கள் சேதம் அடைகின்றன. இந்த வாய்க்கால் ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே பருவமழை தொடங்குவதற்கு முன்பு நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், என்று கூறியிருந்தனர்.
சுண்டக்குடி காலனி தெருவில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டன. இதில் 14 வீடுகள் பழுதாகி உள்ளன. இதனால் மழைக்காலங்களில் சில வீடுகளில் தண்ணீர் உள்ளே புகுந்து விடுகிறது. மேலும் சிமெண்டு பூச்சுகளும் பெயர்ந்து உள்ளன. இதனால் குடியிருப்பதற்கு அச்சமாக உள்ளது. எனவே தொகுப்பு வீடுகளை சீரமைக்க நிதி ஒதுக்க வேண்டும். சிமெண்டு சாலைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று சுண்டக்குடி காலனி தெரு மக்கள் மனு அளித்தனர்.
காலிக்குடங்களுடன் வந்து மனு
கருப்பிலா கட்டளை கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குழாய் வழியாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சில குடும்பத்தினர் குடிநீர் இணைப்பில் மோட்டார் பொருத்தி தண்ணீரை உறிஞ்சி விடுவதால், சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் செய்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை கண்டித்தும், முறையாக அனைத்து குடியிருப்புகளுக்கும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் வந்து மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்.
மழைக்கால நிவாரணம்
சோழமாதேவி கிராமத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் உள்ளனர். மழைக்காலங்களில் இவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசால் வழங்கப்படும் மழைக்கால நிவாரணத்தொகையை வழங்க வலியுறுத்தி மண்பாண்ட தொழிலாளர்கள், கலெக்டரிடம் மனு அளித்தனர். இதேபோல் ஒ.கூத்தூர் கிராமத்தில் வசிக்கும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கும் மழைக்கால நிவாரணம் வழங்கக்கோரி மனு அளித்தனர்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை விவசாய பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். பயிர் காப்பீடு திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியிருந்தனர். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான 384 மனுக்கள் பெறப்பட்டன.