< Back
மாநில செய்திகள்
ரேஷன் கடை, குடிநீர் கேட்டு மனு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

ரேஷன் கடை, குடிநீர் கேட்டு மனு

தினத்தந்தி
|
3 Jan 2023 12:24 AM IST

ரேஷன் கடை, குடிநீர் கேட்டு மனு அளிக்கப்பட்டது.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது பெரம்பலூர் ஒன்றியம், எளம்பலூர் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர். நகரில் வசிக்கும் பொதுமக்களில் சில பெண்கள் வந்து கலெக்டரிடம் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மனு கொடுத்தனர்.

வேப்பூர் ஒன்றியம், பேரளி கிராம ஊராட்சிக்கு உட்பட்ட க.எறையூர் செல்லும் வழியில் வசிக்கும் பொதுமக்கள் முத்தமிழ்ச்செல்வன் தலைமையில் திரண்டு வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில் எங்கள் பகுதியை சேர்ந்த மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்கவும், 100 நாள் வேலைக்கும் சுமார் 3 கிலோ மீட்டர் தூரமுள்ள பேரளிக்குத்தான் செல்ல வேண்டியிருக்கிறது. அங்கு சென்று வரும்போது சில சமயங்களில் விபத்து ஏற்படுகிறது.

பகுதி நேர ரேஷன் கடை

எனவே எங்கள் பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்கவும், 100 நாள் வேலையை எங்கள் பகுதியில் கொடுக்கவும் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர். நாம் தமிழர் கட்சியின் மாவட்ட மகளிரணி பாசறை இணை செயலாளர் மகேஸ்வரி முருகேசன் தலைமையில், அந்த கட்சியினர் வந்து கொடுத்த மனுவில், பெரம்பலூர் நகர்ப்பகுதியில் குடிநீர் பிரச்சினையையும், தெரு நாய்களின் தொந்தரவுகளையும் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

குடிநீர் வசதி

பெரம்பலூர் வடக்கு ஒன்றிய பா.ஜ.க. தலைவர் கார்த்திக், தனது கட்சியினருடன் வந்து கொடுத்த மனுவில், குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 7-வது வார்டில் அண்ணா தெருவில் ஆலமரம் அருகே மோசமான நிலையில் உள்ள தரைப்பாலத்தை அகற்றி விட்டு, உயர்மட்ட பாலம் அமைத்து தர வேண்டும். அதே வார்டில் சமுதாய கூடத்தின் மேற்கு, கிழக்கு தெருக்களில் கழிவுநீர் வடிகால் வசதியுடன் சிமெண்டு சாலை அமைத்து தர வேண்டும். மேலும் கவுல்பாளையம் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட முருகன் நகரில் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள பன்றி பண்ணையை அகற்றி, மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான கழிவுநீர் வடிகால் வசதியுடன் சிமெண்டு சாலையும், குடிநீர் வசதியையும் ஏற்படுத்தி தர வேண்டும், என்று கூறியிருந்தனர்.

முடி திருத்தும் தொழிலாளர்கள் மனு

வேப்பந்தட்டை தாலுகா, அன்னமங்கலத்தை சேர்ந்த செல்வராஜ், தமிழ்நாடு மருத்துவர் சமூக மத்திய சங்கம் மற்றும் தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்கத்தினருடன் வந்து கொடுத்த மனுவில், அன்னமங்கலம் கிராம ஊராட்சி 2-வது வார்டில் மருத்துவர் சமூகத்துக்கு சொந்தமான பொது இடத்தை மற்றொரு சமூகத்தினர் ஆக்கிரமிப்பு செய்து வாடகைக்கு விட்டுள்ளனர். இது தொடர்பாக ஏற்கனவே கலெக்டரிடம் கொடுத்த மனுவின் அடிப்படையில் விசாரணை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊராட்சி மன்றத்தில் நடந்தது. அலுவலர்கள் 3 பேர் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில் மற்றொரு சமூகத்தை சேர்ந்த நபர் மருத்துவர் சமூகத்தை பற்றி தவறாக பேசினர். இதனை விசாரணை அலுவலர்கள் கண்டுகொள்ளாமல் மற்றொரு சமூகத்தை சேர்ந்த நபருக்கு சாதகமாக விசாரணையை முடித்து வைத்தனர். எனவே அந்த நபர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். மேலும் விசாரணை அலுவலர்கள் 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

மொத்தம் 235 மனுக்கள்

கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 235 மனுக்களை கலெக்டர் பெற்றார். முன்னதாக அவர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 பேருக்கு தலா ரூ.4 ஆயிரத்து 385 மதிப்பீட்டில் நவீன மடக்கு ஊன்றுகோல் மற்றும் கடிகாரங்களையும், 4 பேருக்கு தலா ரூ.13 ஆயிரத்து 549 மதிப்பீட்டில் தக்க செயலிகளுடன் கூடிய திறன் பேசிகளையும் வழங்கினார்.

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்குவது வழக்கம். கலெக்டர் வர தாமதம் ஆனாலும் கூட சம்பந்தப்பட்ட அலுவலா்களில் ஒருவர் வந்து கூட்டத்தை தொடங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெறுவார். ஆனால் நேற்று காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கப்படவில்லை. தாமதமாக 10.45 மணிக்குத்தான் கூட்டம் தொடங்கியது. இதனால் மனு கொடுக்க வந்த பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினர். ஆனால் கூட்டம் சரியான நேரத்தில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து வாரத்தில் ஒரு நாள் நடக்கும் இந்த கூட்டத்தை தாமதமின்றி சரியான நேரத்தில் தொடங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்