கரூர்
ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டங்களை முறையாக நடத்தக்கோரி கோரிக்கை மனு
|ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டங்களை முறையாக நடத்தக்கோரி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
கரூரில் வருகை புரிந்த தமிழக அரசின் திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரெஞ்சனை, கரூர் மாவட்ட பட்டியலினை விடுதலைப்பேரவை நிறுவனத்தலைவர் தலித் ஆனந்தராஜ் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலக்குழு, மாவட்ட கண்காணிப்பு குழு, தொழிலாளர் கண்காணிப்பு குழு, மனித உரிமைக்கான தீண்டாமை தடுப்பு குழு போன்ற குழுக்கள் அரசால் நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்களின் கூட்டம் 4 மாதங்களுக்கு ஒரு முறை நடைபெற வேண்டும். ஆனால் ஓராண்டு காலமாக கூட்டம் நடைபெறாமல் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தி முறையாக அரசு திட்டங்கள் முறைப்படுத்திட உத்தரவிட வேண்டும், மாவட்ட நிர்வாக துறையில் ஊரக வளர்ச்சித் துறை, வருவாய் நிர்வாக துறை, பேரிடர் மேலாண்மை துறை, பட்டியல் சமூக வளர்ச்சித் துறை ஆகியவற்றில் அரசு திட்டங்கள் முறையாக செயல்படுத்த ப்படாமல் உள்ளது. அதற்கான நிதிகளை முறையாக பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
அப்போது மாவட்ட செயலாளர் செந்தில்குமார் உடனிருந்தார்.