< Back
மாநில செய்திகள்
நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கக்கோரி மனு
அரியலூர்
மாநில செய்திகள்

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கக்கோரி மனு

தினத்தந்தி
|
15 Aug 2023 12:12 AM IST

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கக்கோரி மனு அளிக்கப்பட்டது.

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

அரியலூர் மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், விவசாயிகள் சார்பில் அளித்த மனுவில், தா.பழூர் ஒன்றியம் வெண்மான் கொண்டான் ஊராட்சிக்கு உட்பட்ட வளவெட்டி குப்பம் செங்கால் ஏரியின் தென்புறம் தார் சாலையில் இருந்து கிழக்கே செல்லும் மண் சாலை உள்ளது. இந்த சாலையின் இடையே காட்டாறு நீரோடை செல்கிறது. இந்த ஓடையில் மழைக்காலங்களில் காட்டாற்று நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து செல்கிறது.

இதனால் அந்த ஓடையை கடந்து சுமார் 100 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு செல்வது இயலாத காரியமாக உள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். கால்நடைகளும் மேய்ச்சலுக்கு செல்ல முடியவில்லை. இது குறித்து விவசாயிகள் பலமுறை மனு கொடுத்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே விவசாயத்தையும், விவசாயிகளையும் காக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கூறப்பட்டிருந்தது.

தார் சாலை

வெண்மான்கொண்டான் கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதை மிகவும் மோசமாக உள்ளது. மழைக்காலங்களில் அந்த வழியாக டிராக்டர், மாட்டு வண்டி செல்ல முடியவில்லை. எனவே இந்த மண் சாலையை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தார் சாலையாக அமைத்து தர வேண்டும் என்று த.வளவெட்டிக்குப்பம் விவசாயி சண்முகம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

திருமானூர் ஒன்றியத்தில் உள்ள தூத்தூர் மற்றும் குருவாடி கிராமங்களில் சுமார் ஆயிரம் ஏக்கர் கோடை நவரை பட்டம் மற்றும் குறுவை நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், தற்போது அறுவடை செய்து வருகின்றனர். நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க காலதாமதம் ஆனதால் வியாபாரிகளிடமும், 18 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீபுரந்தான் மற்றும் கோவிந்தபுத்தூர், முட்டுவாஞ்சேரி ஆகிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் என சுமார் 5 ஆயிரம் நெல் மூட்டைகளை விவசாயிகள் விற்பனை செய்துள்ளனர்.

நேரடி நெல் கொள்முதல் நிலையம்

ஆண்டுதோறும் மாவட்டத்தில் முதல் கொள்முதல் நிலையமாக தூத்தூரில் நெல் கொள்முதல் நிலையம் செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு அந்த கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை. எனவே தூத்தூர் கிராமத்தில் விரைவாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறந்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்று காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் தூத்தூர் தங்க தர்மராஜன் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தார்.

மேலும் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 286 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்