< Back
மாநில செய்திகள்
வைப்புத்தொகையின்றி வங்கிக்கணக்கு தொடங்க நடவடிக்கை எடுக்கக்கோரி மனு
திருச்சி
மாநில செய்திகள்

வைப்புத்தொகையின்றி வங்கிக்கணக்கு தொடங்க நடவடிக்கை எடுக்கக்கோரி மனு

தினத்தந்தி
|
20 Sept 2022 1:46 AM IST

வைப்புத்தொகையின்றி வங்கிக்கணக்கு தொடங்க நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

வங்கி கணக்கு தொடங்க...

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தலைமை தாங்கினார். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு கலெக்டரிடம் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர்.

திருச்சி அரியமங்கலம் காவேரி நகர் பகுதியை சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவன் முபாரக் அலி மற்றும் அவனது தங்கை ஆயிஷா மரியம் ஆகியோர் கொடுத்த மனுவில், தமிழக அரசால் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு வங்கியின் பாஸ்புக் மிகவும் அவசியம். ஆனால் தற்போது மாணவர்கள் வங்கியில் கணக்கு தொடங்க வேண்டும் என்றால் குறைந்தபட்ச தொகையாக ரூ.1000 வைப்புத் தொகையாக இருக்க வேண்டும். இதனால் ஏழ்மையில் உள்ள மாணவர்கள் இன்னும் வங்கி கணக்கு தொடங்காமல் இருக்கின்றனர். எனவே மாணவர்கள் வங்கி கணக்கு தொடங்க, வைப்புத்தொகை ரூ.1000 என்பதை தளர்த்தி "0" பேலன்சில் வங்கி கணக்கு தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

தஞ்சை பஸ்

மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் கொடுத்த மனுவில், திருச்சி துவாக்குடி அண்ணா வளைவு அருகே உள்ள வடக்குமலை, தெற்குமலை பகுதிகளில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் இந்த பகுதியை சுற்றி 2 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, அரசு கலை கல்லூரி, தொழிற்சாலைகள் உள்ளன. எனவே இப்பகுதியில் திருச்சி- தஞ்சை மற்றும் தஞ்சை- திருச்சி பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றிச்செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

பொது மயானம்

பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சி துணை தலைவர் சங்கர்அபிஷேக் கொடுத்த மனுவில், எனது வார்டில் உள்ள மக்கள் பயன்படுத்தும் பொது மயானம் செல்ல பாதை இல்லாமல் நீண்ட நாட்களாக சிரமப்படுகிறோம். இதனால் இறந்தவர் உடலை மயானம் வரை வயல்களில் எடுத்து சென்று வருகிறோம். இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும் இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், சாதிச் சான்றுகள், நலத்திட்ட உதவிகள், அடிப்படை வசதிகள், திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 526 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்