அரியலூர்
இலவச வீட்டுமனை பட்டா, சாலை வசதி கேட்டு மனு
|இலவச வீட்டுமனை பட்டா, சாலை வசதி கேட்டு பொதுமக்கள் மனு அளித்தனர்.
தாமரைக்குளம்:
இலவச வீட்டுமனை பட்டா
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 278 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. இதில் செட்டி திருக்கோணம் காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், நாங்கள் வசித்து வரும் பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்லும் வீதியை சிலர் மூங்கில் படல் மற்றும் கருவேல செடிகளை வைத்து அடைத்துள்ளனர். இதனால் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். இது குறித்து விக்கிரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்காமல் சமாதானம் செய்து அனுப்பினர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் நடந்து செல்ல பாதை ஏற்படுத்தி தர வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.
திருமானூர் ஒன்றியம், கல்லூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் சுமார் 85 குடும்பத்தினர் வீட்டுமனை இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். திருமணம் முடிந்து குழந்தைகளுடன் ஒரே வீட்டில் இரண்டு, மூன்று குடும்பங்களாக நெருக்கடியான நிலையில் வசித்து வருகிறோம். கூலி தொழிலாளர்களான எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.
சாலை, தெருவிளக்கு...
அரியலூர் ரெயில் நிலையம் அருகில் காமராஜர் காலனியில் வசிக்கும் பொதுமக்கள் அளித்த மனுவில், எங்களது பகுதியில் கழிவுநீர் செல்ல வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. வாய்க்காலின் இறுதியில் கழிவுநீர் தேங்கியுள்ளது. எனவே கழிவு நீர் செல்வதற்காக அருகில் உள்ள ரெயில் நிலையம் வாய்க்காலுடன், அந்த கழிவுநீர் வாய்க்காலை இணைத்தால் கழிவுநீர் தேங்காமல் ெசன்றுவிடும். அதற்குரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். மேலும் எங்கள் பகுதியில் சாலை மற்றும் தெருவிளக்கும் அமைத்து தர வேண்டும், என்று கூறியிருந்தனர்.
மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் பள்ளி குழந்தைகளுக்கான நடைப்பயிற்சி குறித்த விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கினார்.