அரியலூர்
மண் பாதையை தார் சாலையாக மாற்றக்கோரி மனு
|மண் பாதையை தார் சாலையாக மாற்றக்கோரி மனு அளிக்கப்பட்டது.
தாமரைக்குளம்:
மருந்துகளுக்கான தொகை வழங்கவில்லை
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் மனு அளித்தனர். இதில் மருந்து நிறுவனங்களை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், அரியலூரில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு கடந்த ஆண்டு சில தனியார் நிறுவனங்கள் சார்பில் மொத்தம் ரூ.65 லட்சத்து 22 ஆயிரத்து 369 மதிப்பிலான மருந்துகளை வழங்கினோம். ஆனால் அதற்குண்டான தொகையை இதுவரை மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் வழங்கவில்லை.
இது குறித்து பலமுறை அவரிடம் முறையிட்டும், பணம் கொடுக்கவில்லை. நாங்கள் பொதுமக்களின் உயிர் காக்க மருந்துகளை வழங்கினோம். எனவே மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உடனடியாக நிலுவைத் தொகையை வழங்கி, எங்களது வாழ்வாதாரத்தை காக்க வேண்டும். சில நிறுவனங்கள் மருந்துகள் வழங்காததால் நோயாளிகள் பாதிக்கப்படும் சூழலும் ஏற்பட வாய்ப்புள்ளது, என்று கூறியிருந்தனர்.
ஏரிகளை தூர்வார அனுமதி
சன்னாவூர் கிராம மக்கள் அளித்த மனுவில், எங்கள் ஊரில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 150 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கான இடம் கிராமத்தின் சார்பில் வழங்கப்பட்டது. அந்த இடம் மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் மாவட்ட கல்வி அலுவலர் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் அந்த இடத்தில் ஒருவர் தனக்கு இடம் உள்ளதாக கூறி, அளந்து கல் போட்டுள்ளார். இதனால் ஊர் மக்கள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளோம். அவருக்கு ஏதாவது நிவாரணம் வழங்கியிருந்தால், அவற்றை ரத்து செய்து இடத்தை பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.
தமிழ்நாடு இயற்கை மற்றும் மனித வள மேம்பாட்டு நிறுவனம் சார்பில் அளித்த மனுவில், அரியலூர் மாவட்டம், காவனூர் ஊராட்சியில் இச்சிலடி ஏரி, அத்திலடி ஏரி, சின்ன ஏரி, ஆயி ஏரி உள்ளிட்ட ஏரிகள், விளாங்குடியில் உள்ள குட்டை ஆகியவற்றில் உள்ள கருவேல மரங்களை அகற்றி ஆழப்படுத்தி, ஏரிகளின் கரைகளை பலப்படுத்தி, வாய்க்கால்களை புனரமைத்து தருவதற்கு சென்னையில் உள்ள ஒரு அமைப்பினர் மற்றும் தனியார் தொண்டு நிறுவனத்தினர் தயாராக உள்ளனர். எனவே இதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்து நிலத்தடி நீரையும், விவசாயிகளையும் காக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.
பாதை ஆக்கிரமிப்பு
மணக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட சுப்புராயபுரம் கிராமத்தில் இருந்து பெரம்பலூர் மாவட்டம் கொத்தவாசல் வழியாக செல்வதற்கு ஒரு மண் சாலை உள்ளது. இந்த சாலையின் நீளம் சுமார் 200 மீட்டர் ஆகும். கொத்தவாசல் கிராமத்தில் இருந்து தினமும் சைக்கிளில் பள்ளி மாணவ, மாணவிகள் இந்த மண் சாலை வழியாகத்தான் கோவிந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று கல்வி பயின்று வருகின்றனர். மழைக்காலங்களில் இந்த மண் சாலையில் சென்று வர கடினமாக உள்ளது. எனவே இந்த மண் சாலையை மெட்டல் சாலையாகவோ, தார் சாலையாகவோ மாற்றி தர வேண்டும் என்று சுப்புராயபுரம் பொதுமக்கள் சார்பாக மனு அளித்தனர்.
இலங்கைக்கூடம் இந்திரா நகரை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், இலந்தைக்கூடம் கிராமத்தில் வீடு இல்லாத தாழ்த்தப்பட்ட மக்கள் 130 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. அதில் பாதையை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் மக்களால் முழுமையாக பயன்படுத்த முடியவில்லை. இந்தப் பாதை வழியாக மின்சார வசதி, குடிநீர் வசதி என அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகிறோம். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்களின் முழுமையான பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.