< Back
மாநில செய்திகள்
கழிவுநீர் வடிகால் வசதியுடன் சாலை அமைக்கக்கோரி மனு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

கழிவுநீர் வடிகால் வசதியுடன் சாலை அமைக்கக்கோரி மனு

தினத்தந்தி
|
4 April 2023 1:19 AM IST

கழிவுநீர் வடிகால் வசதியுடன் சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் மனு அளித்தனர்.

குளம்போல் தேங்குகிறது

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது மேலப்புலியூர் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட நாவலூர் தெற்கு தெருவை சேர்ந்த பொதுமக்களில் சிலர் வந்து கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர்.

அதில், எங்கள் தெருவில் தேவராஜ் வீடு முதல் ரேஷன் கடை வரை கழிவுநீர் வடிகால் வசதியுடன் சாலை அமைக்க வேண்டும். ஏற்கனவே கடந்த நிதி ஆண்டில் கலெக்டரிடம் கொடுத்த மனுவுக்கு 15-வது நிதிக்குழு மானியம் மூலம் பணிகள் நடைபெறும் என்று வட்டார வளர்ச்சி அலுவலரிடம் இருந்து பதில் கடிதம் வந்தது. ஆனால் இதுவரை எந்த பணிகளும் நடக்கவில்லை. இதனால் கழிவு நீர் செல்ல முடியாமல் குளம் போல் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி கழிவுநீர் வடிகால் வசதியுடன் சாலை அமைத்து தர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

சகோதரிகள் மனு

உடும்பியம் அம்பேத்கர் தெருவை சோ்ந்த பெருமாள் என்ற ராஜமாணிக்கத்தின் மகள் ரூபினி தனது அக்காள், தங்கையுடன் வந்து கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எங்களுக்கும், எங்களது பெரியப்பாக்கள் குடும்பத்திற்கும் இடையே பூர்வீக நிலத்தினை பங்கு வைப்பதில் பிரச்சினை இருந்து வருவதோடு, இது தொடர்பாக கோர்ட்டிலும் வழக்கு விசாரணையில் உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஒரு பெரியப்பா குடும்பத்தினர் சம்பவத்தன்று எங்கள் வீட்டிற்கு வந்து தகாத வார்த்தையால் திட்டி, எங்களை இரும்பு கம்பியால் தாக்கி விட்டு சென்றனர். இது தொடர்பாக அரும்பாவூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

புதிய சாலை

பெரம்பலூர் வடக்கு ஒன்றிய பா.ஜ.க.வினர் கொடுத்த மனுவில், குரும்பலூர்-மூலக்காடு இடையே பழுதடைந்து மோசமான நிலையில் காணப்படும் தார் சாலையை புதிதாக அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர். இதேபோல் பெரம்பலூர் மாவட்ட மக்கள் நீதி மய்யத்தினர் கொடுத்த மனுவில், பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து காமராஜர் வளைவு வரை மோசமாக காட்சியளிக்கும் தார் சாலையை புதிதாக அமைக்க வேண்டும்.

டாஸ்மாக் கடைகளில் ஐகோர்ட்டு உத்தரவின்படி காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்திற்கு மது பானம் வாங்கும் மது பிரியர்களிடம் இருந்து பணியாளர்கள் கூடுதலாக ரூ.10-ஐ பெறாமல், ரூ.20-ஐ பெற்றுக்கொண்டு, அவர்கள் காலி மது பாட்டில்களை திரும்ப கொடுக்கும் போது ரூ.10-ஐ தான் திரும்ப கொடுக்கின்றனர். எனவே ஐகோர்ட்டு உத்தரவை டாஸ்மாக் கடைகளில் ஒழுங்காக பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். காமராஜர் வளைவு, ரோவர் வளைவு, பாலக்கரை, நான்கு ரோடு பகுதிகளில் கழிவறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும், என்று கூறியிருந்தனர்.

ஒப்பந்த பணியாளர்களுக்கு...

பெரம்பலூர் மாவட்ட சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் கொடுத்த மனுவில், பெரம்பலூர் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த பணியாளர்களுக்கு கொடுக்கப்படும் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்பு நிதிக்கான தொகையை, அவரவர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் முறையாக செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், சீருடை, அடையாள அட்டை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

கூட்டத்தில், கலெக்டர் கற்பகம் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 289 மனுக்களை பெற்றார். முன்னதாக பட்டு வளர்ச்சி துறையின் சார்பில் கடந்த நிதி ஆண்டில் மாவட்ட அளவில் சிறந்து விளங்கிய 3 பட்டு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையை கலெக்டர் வழங்கினார். மேலும் அவர் கலை பண்பாட்டு துறையின் சார்பில் கடந்த 2021-22-ம் ஆண்டிற்கு பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 15 கலைஞர்களுக்கு கலை விருது வழங்கினார். சத்துணவு துறையில் பணியின்போது மரணம் அடைந்த 3 அலுவலர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கடந்த வாரம் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வாரிசு சான்றிதழ் மற்றும் கலப்புத் திருமணச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த 2 பேருக்கும் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

Related Tags :
மேலும் செய்திகள்