< Back
மாநில செய்திகள்
ஓடைகளின் குறுக்கே தடுப்பணை கட்டக்கோரி மனு
அரியலூர்
மாநில செய்திகள்

ஓடைகளின் குறுக்கே தடுப்பணை கட்டக்கோரி மனு

தினத்தந்தி
|
12 Sept 2023 12:19 AM IST

ஓடைகளின் குறுக்கே தடுப்பணை கட்டக்கோரி மனு அளிக்கப்பட்டது.

தாமரைக்குளம்:

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. இதில் ஸ்ரீபுரந்தான் ஊராட்சி மன்ற தலைவர் உலகநாதன் அளித்த மனுவில், செக்கடித்தெரு முதல் ஓட்டக்கோவில் வரை சுமார் 500 மீட்டரில் தா.பழூர் செல்லும் சாலை ஒரு வழி சாலையாக உள்ளதை இரு வழி சாலையாக மாற்றி, இருபுறமும் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும்.

ஸ்ரீபுரந்தான் ஊராட்சியில் கோவில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். பொன்னாறு வடிகால் ஓடையில் தடுப்பணை அமைக்க வேண்டும். நாலன் ஏரி வரத்து வாய்க்கால் ஓடை மற்றும் பெரியேரி வாய்க்கால் ஓடையின் குறுக்கே தடுப்பணை அமைக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

இதேபோல் உடையார்பாளையம் புதுச்சாவடியை சேர்ந்த முஸ்லிம்கள் அளித்த மனதில், புதுச்சாவடி கிராம சர்வே எண் 125 தர்மதாய சத்திரமாக இருந்தது. ஆனால் யூ.டி.ஆர். அளவீடு செய்தபோது தவறுதலாக குளமாக மாற்றி உள்ளனர். இது சம்பந்தமாக 7.12.2021-ல் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவிற்கு மனு அனுப்பி இருந்தோம். அந்த மனுவின் அடிப்படையில் ஜெயங்கொண்டம் தாசில்தார் விசாரணை முடித்தும், இது வரை தர்மதாய சத்திரமாக யு.டி.ஆர். திருத்தம் செய்யாமல் உள்ளது. எனவே இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

மேலும் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 314 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்