கரூர்
பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கக்கோரி மனு
|ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கக்கோரி மனு அளிக்கப்பட்டது.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கவுண்டம்பட்டி, பள்ளி மேலாண்மைக்குழு சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கவுண்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 182 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளில் மாணவர்கள் 110 பேர் உள்ளனர். இவர்களுக்கு 2 இடைநிலை ஆசிரியர்களே உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாகவே தொடக்க வகுப்புகளில் மாணவர்களின் எண்ணிக்கை 100-க்கும் அதிகமாகவே இருந்துள்ளது. கல்வி கற்பிக்க அதிக சிரமங்கள் ஏற்பட்டு வருகின்றது. எனவே மாணவர்களின் கல்வி நலனை கருதி பள்ளிக்கு நிரந்தரமாக மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 2 பணி இடங்களை உருவாக்கி தர வேண்டும். மேலும் தற்போதைய நிலையில் மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க தற்காலிகமாக மாற்றுப்பணியில் 2 ஆசிரியர்களை அமர்த்தி தர வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.