நாமக்கல்
3 தலைமுறையாக குடியிருக்கும் நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டும்பொதுமக்கள், கலெக்டரிடம் மனு
|ராசிபுரம் நகராட்சி கோனேரிப்பட்டியில் 3 தலைமுறையாக குடியிருக்கும் நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டும் என பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
பட்டா வழங்க கோரிக்கை
ராசிபுரம் நகராட்சிக்குட்பட்ட கோனேரிப்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்து, குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் உமாவிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது :-
நாங்கள் ராசிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட கோனேரிப்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் 3 தலைமுறையாக குடியிருந்து வருகிறோம். அந்த பகுதி அரசு நத்தம் புறம்போக்கு நிலம் ஆகும். இதனால் பல ஆண்டுகளுக்கு முன்பே பட்டா கேட்டு அரசிடம் முறையிட்டு வந்தோம்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வீடுகளை அளவீடு செய்து சென்ற அதிகாரிகள் உடனடியாக வழங்குவதாக கூறினர். ஆனால் இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. எனவே எங்களின் கோரிக்கையை ஏற்று, பட்டா வழங்க ஆவன செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.
டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு
திருச்செங்கோடு நகராட்சி கொல்லப்பட்டி கிளையை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று கலெக்டர் உமாவிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
திருச்செங்கோடு நகராட்சி 30-வது வார்டு கொல்லப்பட்டியில் 2 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவை குடியிருப்பு பகுதியில் அமைந்து உள்ளதால், பொதுமக்களுக்கு இடையூறாக இருந்து வருகிறது. மேலும் கொக்கராயன்பேட்டை மெயின் ரோட்டில் இருப்பதால், அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. மதுபிரியர்கள் குடித்து விட்டு, தகராறு செய்வதால், சண்டை, சச்சரவு நடக்கிறது.
விவசாய நிலங்களில் பாட்டில், பிளாஸ்டிக் பொருட்களை போடுவதால், விவசாய நிலம் பாதிக்கப்படுகின்றன. எனவே 2 டாஸ்மாக் கடைகளையும் அகற்ற வேண்டும். இல்லை என்றால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.
இந்திய மாணவர் சங்கம்
இதேபோல் இந்திய மாணவர் சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் அதிக அளவு மாணவர்கள் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து, அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேர்ந்து விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர். விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு தரமான உணவு முறையாக வழங்கப்படவில்லை.
மாணவர்கள் விடுதிகளில் தரமற்ற உணவு சாப்பிட்ட காரணத்தால், ஏகலைவா உண்டு உறைவிட பள்ளியிலும், நடுப்பட்டி நடுநிலை பள்ளியிலும் வயிற்று வலி மற்றும் தலைவலி மயக்கம் என உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைகளில் அனுமதிப்பதும், சிகிச்சை பெறுவதும் தொடர் கதையாக உள்ளது. இதனால் அவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. எனவே அரசு பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கி படிக்கக்கூடிய மாணவர்களுக்கு தரமான உணவினை வழங்க உத்தரவாதப்படுத்த வேண்டும். அதே போல் விடுதி மாணவர்களுக்கு வழங்க கூடிய உணவு படியை நாள் ஒன்றுக்கு ரூ.60 ஆக அரசு உயர்த்தி வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.