நாமக்கல்
சொந்த வாகனங்களை வாடகைக்கு இயக்கும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - கலெக்டரிடம் மனு
|சொந்த பயன்பாட்டு வாகனங்களை வாடகைக்கு இயக்கும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
சொந்த பயன்பாட்டு வாகனங்களை வாடகைக்கு இயக்கும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
கலெக்டரிடம் மனு
நாமக்கல் மாவட்ட சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சங்கத்தினர் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் உமாவிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுலா வாகன தொழிலை நம்பி ஏராளமான குடும்பங்கள் உள்ளன. இந்த வாகனங்கள் மூலம் அரசுக்கு சுமார் ரூ.1 கோடி அளவுக்கு வருவாய் ஈட்டப்படுகிறது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் சொந்த பயன்பாட்டு வாகனங்களை பொதுமக்களுக்கு வாடகைக்கு இயக்குவதாலும், ஒருவழி பாதை என்கிற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்களை சேர்ந்த வாகனங்கள் டாக்சி என்ற பெயரில் அரசின் அனுமதி இன்றி இயக்கப்படுவதாலும், எங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
ரூ.1 கோடி வருவாய் இழப்பு
இதுபோன்று சொந்த பயன்பாட்டு வாகனங்கள் முறை இல்லாமல் இயக்கப்படுவதால், அரசுக்கு சுமார் ரூ.1 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. சொந்த பயன்பாட்டு வாகனங்களை சுற்றுலாவுக்கு இயக்கும்போது, ஆய்வு செய்து அதிகாரிகள் பிடித்தால் குறைந்த அளவு அபராத தொகை மட்டும் விதிக்கப்படுகிறது. எனவே அவர்கள் மீண்டும், மீண்டும் அதே தவறை செய்கிறார்கள். மேலும் உறவினர்களை அழைத்து செல்கிறோம் என்று கூறி அரசு அதிகாரிகளை ஏமாற்றி தப்பித்து கொள்கின்றனர். இது தொடர்பாக நாங்கள் புகார் கொடுத்தால், எங்களை தாக்க முயற்சி செய்கிறார்கள்.
எனவே தாங்கள் (கலெக்டர்) இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் வாகனங்களுக்கு, சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அதிகளவு அபராதம் விதித்தும், பதிவு எண்ணை ரத்து செய்தும், அந்த வாகனத்தை இயக்கும் டிரைவரின் ஓட்டுனர் உரிமத்தை தற்காலிமாக நிறுத்தி வைக்கவும், அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி எங்கள் வாழ்வாதாரத்தை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
கால்நடை ஆம்புலன்ஸ்
இதேபோல் இந்திய ஒருங்கிணைந்த உழவர் கூட்டமைப்பின் தலைவர் பன்னீர்செல்வம் மற்றும் நிர்வாகிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது :-
குமாரபாளையம் தாலுகா பகுதியில் அதிக அளவில் கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன. இந்த கால்நடைகளுக்கு அடிக்கடி உடல்நல குறைவு ஏற்பட்டு வருகிறது. சில நேரங்களில் கால்நடைகளை மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் முன்பு அவை இறந்து விடுகின்றன. எனவே குமாரபாளையம் பகுதிக்கு என தனியாக கால்நடை ஆம்புலன்ஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதேபோல் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அக்கலாம்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மயான ஆக்கிரமிப்பை அகற்றி தருமாறு கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.