தர்மபுரி
சிறுமி பலாத்காரம் விவகாரத்தில்சிறை வார்டனை கைது செய்யக்கோரி பெற்றோர் மனுதர்மபுரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வழங்கினர்
|சிறுமி பாலியல் பலாத்காரம் தொடர்பாக போக்சோ வழக்கில் சிக்கிய சிறை வார்டனை கைது செய்யக்கோரி சிறுமியின் பெற்றோர் தர்மபுரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தனர்.
சிறுமி கர்ப்பம்
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி அப்பகுதி பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். சிறுமியின் பெற்றோர் பெங்களூருவில் தங்கி கூலி வேலை செய்து வந்தனர். சிறுமி தனது பாட்டியின் பராமரிப்பில் படித்து வந்தார்.
இந்த நிலையில் அண்மையில் சிறுமிக்கு உடலநலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ஊருக்கு வந்த சிறுமியின் தாய், சிறுமியை டாக்டரிடம் அழைத்து சென்றார். டாக்டர் பரிசோதித்தபோது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் குடும்பத்தினர் இதுபற்றி சிறுமியிடம் விசாரித்தனர்.
சிறை வார்டன் மீது வழக்கு
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த லெனின்குமார் என்கிற பார்த்திபன் (வயது 30) கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த சிறுமியை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்ததுடன், இதனை வெளியில் சொல்லக்கூடாது என்று சிறுமியை மிரட்டி இருப்பதும் தெரிந்தது.
லெனின்குமார் குன்னூரில் சிறை வார்டனாக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் அரூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி லெனின் குமார் மீது கடந்த மாதம் போக்சோ வழக்குப்பதிவு செய்தனர்.
கைது செய்யகோரி மனு
இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர் மற்றும் ஜனநாயக மாதர் சங்கத்தினர் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு மனு அளித்தனர். அதில் லெனின் குமாரின் உறவினர்கள் சிலர் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும்.
சிறுமி பலாத்காரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள போக்சோ வழக்கில் லெனின்குமாரை கைது செய்ய வேண்டும். அவரை பணி நீக்கம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.