< Back
மாநில செய்திகள்
பிக்கிலி அருகே வனப்பகுதியில்மாடுகளை மேய்க்க அனுமதிக்க வேண்டும்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கிராம மக்கள் மனு
தர்மபுரி
மாநில செய்திகள்

பிக்கிலி அருகே வனப்பகுதியில்மாடுகளை மேய்க்க அனுமதிக்க வேண்டும்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கிராம மக்கள் மனு

தினத்தந்தி
|
9 May 2023 12:30 AM IST

பிக்கிலி அருகே வனப்பகுதியில் நாட்டு மாடுகளை மேய்க்க தொடர்ந்து அனுமதி வழங்க வேண்டும் என்று பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதிய தொகை, கல்வி கடன் உதவி, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர்.

இந்த கூட்டத்தில் தர்மபுரி நெல்லி நகர் சொசைட்டி காலனி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், நாங்கள் வசிக்கும் பகுதியில் விளையாட்டு மைதானமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் வேறு கட்டுமான பணிகளை மேற்கொள்ள கூடாது. அந்தப் பகுதியில் விளையாட்டு மைதானத்திற்குரிய பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி இருந்தனர்.

வாழ்வாதாரம் பாதிக்கப்படும்

பிக்கிலி ஊராட்சி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து கொடுத்த கோரிக்கை மனுவில், பிக்கிலி ஊராட்சிக்குட்பட்ட பெரியூர் உள்ளிட்ட 17 கிராமங்கள் மற்றும் 54 குக்கிராமங்களில் வசிக்கும் 600 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் 10 ஆயிரம் நாட்டு மாடுகளை வளர்த்து வருகிறோம். எங்களுக்கு வாழ்வாதாரமாக உள்ள இந்த நாட்டு மாடுகளை அருகே உள்ள வனப்பகுதியை நம்பி வளர்த்து வருகிறோம். வனப்பகுதியில் நாங்கள் வளர்க்கும் நாட்டு மாடுகளை மேய்க்க வனத்துறையினர் அனுமதிக்க மறுக்கிறார்கள். இதனால் நாட்டு மாடுகளை மட்டுமே நம்பியுள்ள எங்கள் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்படும். எனவே வனப்பகுதியில் தங்கி நாட்டு மாடுகளை மேய்க்க எங்களுக்கு தொடர்ந்து அனுமதி வழங்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.

தர்மபுரி செட்டிக்கரை பள்ளகொல்லை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், 600 வீடுகள் உள்ள எங்கள் கிராமத்தில் இருந்து கொங்கன் கொட்டாய் பகுதிக்கு தார் சாலை அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த பகுதியில் தார் சாலையை விரைவாக அமைக்க வேண்டும். இந்த பகுதியில் சுடுகாட்டில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கோரியிருந்தனர். இந்த கூட்டத்தில் பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கிய கலெக்டர் சாந்தி உரிய விசாரணையின் அடிப்படையில் கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்