தர்மபுரி
பையர்நத்தம் கிராமத்தில்மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு
|பையர்நத்தம் கிராமத்தில் செயல்படும் மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
65 குடும்பங்கள்
தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, கல்வி கடன் உதவி, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர்.
இந்த கூட்டத்தில் பாப்பாரப்பட்டி பகுதியில் வசிக்கும் 65 குடும்பங்களை சேர்ந்தவர்கள் திரண்டு வந்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் கடந்த 56 ஆண்டுகளாக பாப்பாரப்பட்டியில் வீடு மற்றும் சிறு கடைகள் அமைத்து வசித்து வருகிறோம். அரசுக்கு வரி மற்றும் தீர்வையை தவறாமல் செலுத்தி வருகிறோம். நாங்கள் குடியிருக்கும் இடத்தின் அருகே உள்ள ஏரி நிரம்பினாலும் எங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த நிலையில் நாங்கள் குடியிருக்கும் இடத்தை காலி செய்ய கோரி அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களான எங்களுக்கு வேறு வசிப்பிடம் இல்லை. இந்த பகுதியில் இருந்து நாங்கள் வெளியேறினால் எங்களுக்கு வாழ்வாதாரம் இல்லை. எனவே 65 குடும்பங்களும் அந்த பகுதியில் தொடர்ந்து வசிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.
போக்குவரத்துக்கு இடையூறு
பையர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், பையர்நத்தம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மதுக்கடையால் அந்த பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. பெண்கள், மாணவ, மாணவிகள் அந்த பகுதி வழியாக சென்று வர முடியவில்லை. அடிக்கடி விபத்தும் நடக்கிறது. எனவே அந்த மதுக்கடையை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
சிட்லிங் ஊராட்சி பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், நாங்கள் ஏற்கனவே அனுபவ அடிப்படையில் விவசாயம் செய்து வரும் நிலங்களுக்கு உரிய பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பகுதியில் போலி ஆவணங்கள் மூலம் செய்யப்பட்ட பத்திரப்பதிவை உரிய விசாரணை அடிப்படையில் கண்டறிந்து ரத்து செய்ய வேண்டும் என்று கோரி இருந்தனர்.
ஆக்கிரமிப்பு
பாலக்கோடு அருகே உள்ள கரகூர் மற்றும் சந்தை தோப்பு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், எங்கள் பகுதியில் 500 குடும்பங்கள் வசிக்கிறோம். இந்த பகுதியில் இறப்பவர்களை கிராமத்தில் ஓடை அருகே புறம்போக்கு நிலத்தில் உள்ள மயானத்தில் புதைத்து வருகிறோம். அந்த மயானத்திற்கு செல்லும் பாதை தற்போது ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது. ஆக்கிரமிப்பை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
நல்லாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், இந்த பகுதியில் சிலர் கட்டப்பஞ்சாயத்து நடத்தி சில குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். இதில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று ஆய்வு நடத்திய கலெக்டர் சாந்தி அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.