< Back
மாநில செய்திகள்
பள்ளிபாளையத்தில்சட்டவிரோத மது விற்பனையை தடுக்க வேண்டும்குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் மனு
நாமக்கல்
மாநில செய்திகள்

பள்ளிபாளையத்தில்சட்டவிரோத மது விற்பனையை தடுக்க வேண்டும்குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் மனு

தினத்தந்தி
|
11 April 2023 12:05 AM IST

பள்ளிபாளையத்தில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுத்தனர்.

சட்ட விரோத மதுவிற்பனை

பள்ளிபாளையம் ஜனதா நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலையிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

ஜனதா நகர் காவிரி கரையோர பகுதியில் சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் கடந்த 1½ ஆண்டுகளாக சட்ட விரோத மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. இது தொடர்பாக போலீசில் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. காவல்துறையின் அவசர எண்ணிற்கு புகார் செய்தால், சில நாட்கள் மட்டும் விற்பனை இருக்காது. பின்னர் வழக்கம்போல் சட்ட விரோத மது விற்பனை தொடங்கி விடும். இதனால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகி உள்ளது. எனவே பொதுமக்களின் நலன்கருதி சட்ட விரோத மது விற்பனையை (சந்துகடை) நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.

கழிப்பிட வசதி

இதேபோல் முத்துகாப்பட்டி ஊராட்சி பெருமாபாளையம் பகுதி பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-

முத்துகாப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். அவர்களுக்கு சுகாதாரமான முறையில் கழிப்பிட வசதி இல்லை. தற்போது உள்ள கழிப்பிடம் பழுதாகி உள்ளது. எனவே அதை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பள்ளிக்கு அருகில் கழிவுநீர் குட்டை பாதுகாப்பு இன்றி உள்ளது. எனவே கழிவுநீர் குட்டையை யொட்டி தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

கிராம நிர்வாக அலுவலர்கள்

இதேபோல் காந்தியவாதி ரமேஷ் தலைமையில் செல்லப்பம்பட்டி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது :-

அரசு உத்தரவுப்படி கிராம நிர்வாக அலுவலர்கள் அந்த கிராமத்தில் முழு நேரமாக தங்கி பணியாற்ற வேண்டும். அரசு குடியிருப்பு இல்லை என்றாலும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள குடியிருப்பிலோ, தனியார் இடத்திலோ தங்கி பணிகள் தேக்கம் இன்றி நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும். சில கிராம நிர்வாக அலுவலர்கள் அவ்வாறு தங்கி வேலை செய்யாததால் காலதாமதம் ஆகிறது. எனவே கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் சம்பந்தப்பட்ட கிராமத்தில் தங்கி பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்