தர்மபுரி
குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விண்ணப்பித்த ஒரே வாரத்தில் 4 பெண்களுக்கு வீட்டுமனை பட்டா கலெக்டர் சாந்தி வழங்கினார்
|குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விண்ணப்பித்த ஒரே வாரத்தில் 4 பெண்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை தர்மபுரி கலெக்டர் சாந்தி வழங்கினார்.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். சாலை, குடிநீர், பஸ் வசதிகள், பட்டா, சிட்டா, புதிய குடும்ப அட்டை, இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை என மொத்தம் 475 கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன. இந்த கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
கடந்த வாரம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே தாளநத்தம் கிராமத்தை சேர்ந்த 4 பெண்கள் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் கோரி கோரிக்கை மனு கொடுத்தனர். இந்த கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தாருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பித்த ஒரே வாரத்தில் நேற்று நடந்த கூட்டத்தில் 4 பெண்களுக்கும் இலவச வீட்டுமனை பட்டாக்களை கலெக்டர் சாந்தி வழங்கினார்.
நற்சான்றிதழ்
இதேபோல் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி சிங்கார அழகன், மணியம்பாடி பகுதியை சேர்ந்த சந்திரா ஆகியோருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை பெறுவதற்கான ஆணை, கடகத்தூர் பகுதியை சேர்ந்த திருநங்கை சரஸ்வதி என்பவருக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் நடந்த கிராம ஊராட்சி தலைவர்களுக்கான கருத்தரங்கில் கலந்து கொண்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் சிவாடி ஆறுமுகம், தீர்த்தமலை கலைவாணி, ராமியனஅள்ளி ராஜா ஆகியோருக்கு அரசின் முதன்மை செயலாளரின் நற்சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சாந்தி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கவிதா, பழங்குடியினர் நல திட்ட இயக்குனர் ரமேஷ் குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் மரியம் ரெஜினா, ஊராட்சிகள் உதவி இயக்குனர் மாலா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவல்லி மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.