தர்மபுரி
தர்மபுரியில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.3 கோடி மோசடி நடவடிக்கை கோரி குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு
|தர்மபுரியில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.3 கோடி மோசடி நடவடிக்கை கோரி குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு
தர்மபுரியில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.3 மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது.
ஏல சீட்டு மோசடி
தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் இலவச வீட்டுமனைபட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 451 மனுக்களை அளித்தனர்.
கூட்டத்தில் பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, தர்மபுரி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில், தர்மபுரி அன்னசாகரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சிலர் நடத்திய ஏல சீட்டில் பலர் பணம் கட்டினோம். இவ்வாறு நாங்கள் கட்டிய ரூ.3 கோடியை ஏலச்சீட்டு நடத்தியவர்கள் திருப்பி தராமல் மோசடி செய்துள்ளனர். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்து பணத்தை திருப்பி பெற்றுத்தர வேண்டும் என்று கூறியுள்ளனர்..
சாலை அடைப்பு
நல்லம்பள்ளி தாலுகா பாலம்மன் தோப்பு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், எங்கள் கிராமத்தில் கடந்த 2006-ம் ஆண்டு தார்சாலை போடப்பட்டது. கடந்த 16 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்ட இந்த தார்சாலையை புதுப்பிக்க ஜல்லிக்கற்கள் கொட்டிய நிலையில் சிலர் சாலையை அடைத்து விட்டனர். இதனால் பொதுமக்கள் கிராமத்திற்கு செல்ல வழி இல்லாமல் சிரமம் அடைந்து வருகின்றனர்.
எனவே அடைப்பை அகற்றி தார்சாலையை உடனடியாக சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரியிருந்தனர். மனுக்களை பெற்று ஆய்வு நடத்திய கலெக்டர் அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
குழந்தைகளுக்கு நிதி உதவி
இதனிடையே சமூக பாதுகாப்பு துறையின் தர்மபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் குழந்தைகள் நிதி ஆதரவு திட்டம் மூலம் 41 குழந்தைகளுக்கு ரூ.6 லட்சத்து 56 ஆயிரம் நிதிஉதவியை கலெக்டர் சாந்தி வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, உதவி கலெக்டர் விஸ்வநாதன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சாந்தி, மாவட்ட அலுவலர் ஜெயகுமார், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ராஜசேகரன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கவிதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வம் உள்பட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.