நாமக்கல்
ஆன்லைன் வர்த்தகத்தில் இழந்த பணத்தை மீட்டு தர வேண்டும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மனு
|ஆன்லைன் வர்த்தகத்தில் இழந்த பணத்தை மீட்டு தர வேண்டும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மனு
தனியார் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் முதலீடு செய்து லட்சக்கணக்கில் பணத்தை இழந்த சுமார் 30-க்கும் மேற்பட்டோர் நேற்று நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வந்து, போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வியிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:-
ஆன்லைன் வர்த்தக (டிரேடிங்) நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால், விகிதங்கள் அடிப்படையில் பணம் திருப்பி வழங்கப்படும் என தனியார் நிறுவனத்தினர் அறிவித்து இருந்தனர். இதனை நம்பி தமிழகம் முழுவதும் ரூ.5 ஆயிரம் முதல் சுமார் ரூ.5 லட்சம் வரை ஏராளமானோர் முதலீடு செய்து உள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்திலும் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு உள்பட மாவட்டம் முழுவதும் இருந்து 500-க்கும் மேற்பட்டோர் அந்த ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் முதலீடு செய்து இருந்தோம். இந்த நிலையில் திடீரென அந்த ஆன்லைன் வர்த்தக நிறுவனம் செயல்படவில்லை. ஆதலால் நாங்கள் ஏமாற்றப்பட்டு இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தோம். எனவே நாங்கள் முதலீடு செய்த பணத்தை போலீசார் மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.