< Back
மாநில செய்திகள்
விவசாய உபகரணங்கள் வாங்க கட்டாயப்படுத்த கூடாதுதொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் மனு
நாமக்கல்
மாநில செய்திகள்

விவசாய உபகரணங்கள் வாங்க கட்டாயப்படுத்த கூடாதுதொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் மனு

தினத்தந்தி
|
26 Sept 2023 12:30 AM IST

விவசாய உபகரணங்கள் வாங்க கட்டாயப்படுத்த கூடாது என வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளரிடம் மனு கொடுத்தனர்.

கலெக்டர் அலுவலகத்தில் மனு

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் பாலமுருகன், மாவட்ட தலைவர் சிவசங்கரன், பொருளாளர் காமராஜ் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் திரண்டு வந்து, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வகுமரனிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது :-

நாமக்கல் மாவட்டத்தி்ல் 169 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படுகின்றன. இந்த சங்கங்களில் பல்நோக்கு சேவை மையம் விவசாய உள்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ், பொருட்கள் வாங்க விருப்பம் உள்ள சங்கங்களில் மட்டுமே அமல்படுத்த வேண்டும் என, கூட்டுறவு துறை மூலம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தொடர் விடுப்பு

ஆனால், தற்போது நலிவடைந்த மற்றும் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கும் சங்கங்களுக்கு விவசாய உபகரணங்கள் மற்றும் லாரி, சரக்கு ஆட்டோ போன்ற வாகனங்கள் வாங்க நிர்ப்பந்திக்கப்படுகிறது. இதனால் சங்கங்கள் மேலும் நஷ்டத்துக்கு உள்ளாகி நிதிநிலை பெரிதும் பாதிக்கும் அபாயம் உள்ளது. அவற்றை கருத்தில் கொண்டு, பொருட்களை வாங்க கட்டாயப்படுத்துவதை கைவிட வேண்டும்.

இந்த கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில், வருகிற அக்டோபர் மாதம் 3-ந் தேதி முதல் ஏற்கனவே வாங்கி உள்ள உபகரணங்களை மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் ஒப்படைத்துவிட்டு, அனைத்து பணியாளர்களும் தொடர் விடுப்பில் செல்லும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.

சட்ட விரோத மது விற்பனை

நாமக்கல் மாவட்டம் கே.புதுப்பாளையம் அருகே உள்ள வள்ளியப்பம்பட்டி காலனியை சேர்ந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- வள்ளியப்பம்பட்டி காலனியில் 160 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் ஊரை சேர்ந்த நபர் ஒருவர் வீட்டிற்குள்ளே மதுபாட்டில்களை பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்து வருகிறார். இதனால் விரும்பதகாத சம்பவங்கள் அவ்வப்போது ஏற்படுகிறது. எனவே பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பெண்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபடும் நபர் மீது போலீசில் புகார் கொடுத்தால் எவ்வித நடவடிக்கை எடுப்பது இல்லை. மாறாக தட்டிக்கேட்கும் பெண்கள் மற்றும் மாணவர்கள் மீது அவர் பொய் புகார் கொடுத்து உள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து சட்ட விரோத மது விற்பனையை தடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.

மேலும் செய்திகள்