< Back
மாநில செய்திகள்
குடிசை மாற்றுவாரியவீடுகளுக்கான கூடுதல் பணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும்பொதுமக்கள், கலெக்டரிடம் மனு
நாமக்கல்
மாநில செய்திகள்

குடிசை மாற்றுவாரியவீடுகளுக்கான கூடுதல் பணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும்பொதுமக்கள், கலெக்டரிடம் மனு

தினத்தந்தி
|
12 Sept 2023 12:30 AM IST

குடிசைமாற்று வாரிய வீடுகளுக்காக கூடுதலாக ரூ.33 ஆயிரத்து 600 செலுத்த வேண்டிய பணத்தை தள்ளுபடி செய்யக்கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

கலெக்டரிடம் மனு

திருச்செங்கோடு தாலுகா வரகூராம்பட்டி ஊராட்சி பட்டேல் நகரை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் உமாவிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது :-

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் சார்பில் பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் பட்டேல் நகரில் 848 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்படும் தருவாயில் உள்ளது. இந்த திட்டத்தில் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்ட எங்களிடம் அதிகாரிகள் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 500 காசோலையாக செலுத்த அதிகாரிகள் கூறினர்.

அதன்படி அனுப்பி வைத்தோம். இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் குலுக்கல் முறையில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் கூடுதலாக ரூ.33 ஆயிரத்து 600 செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள எங்களால் அந்த தொகையை கட்ட முடியவில்லை. எனவே அந்த தொகையை தள்ளுபடி செய்து, எங்களுக்கு வீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.

புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு

நாமகிரிப்பேட்டை அருகே உள்ள கல்லாங்குத்து பகுதியை சேர்ந்த பொதுமக்கள், கலெக்டர் அலுவலகம் வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது :-

எங்கள் பகுதியில் கடந்த 1980-ம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 40-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இதில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் எதிர்கால பயன்பாட்டிற்காக புறம்போக்கு இடத்தை ஒதுக்கீடு செய்தனர். ஆனால் இலவச வீட்டுமனை பட்டா வைத்துள்ள நபர்களும், புறம்போக்கு நிலத்தை அனுபவத்தில் வைத்து உள்ளதாக காட்டி வருவாய்த்துறையிடம் பட்டா கேட்டு விண்ணப்பித்து வருகின்றனர். எனவே வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, மக்களின் எதிர்கால பயன்பாட்டிற்கு உள்ள இடங்களை மீட்டு, மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தனர். அவர்களுடன் தமிழ்புலிகள் கட்சியின் நிர்வாகிகளும் உடன் வந்து இருந்தனர்.

கல்விகடன் சிறப்பு முகாம்

ராசிபுரம் மக்கள் நலக்குழுவின் தலைவர் பாலு என்கிற பாலசுப்ரமணி மற்றும் நிர்வாகிகள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது :-

ராசிபுரம் நகரில் பள்ளி கல்வியை முடித்து விட்டு, மேற்கல்வி பயில்வதற்கு ஏழை, எளிய மாணவ, மாணவிகள் பலர் தனியார் கல்லூரிகளில் சேர்ந்து உள்ளனர். அவர்கள் கல்வி கட்டணம் முழுமையாக செலுத்த முடியாத ஏழ்மை நிலையில் இருப்பதால், வங்கிகளின் மூலம் கல்விக்கடன் கோரினால் மாணவர்களின் பெற்றோர் வங்கிகள் மூலம் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.

எனவே உயர்கல்வி பயிலும் ஏழை, எளிய மாணவர்கள் கல்விக்கடனை வங்கியின் மூலம் எளிமையான முறையில் பெறுவதற்கு வங்கிகளின் சார்பில் கல்விகடன் வழங்கும் சிறப்பு முகாம் ராசிபுரத்தில் நடத்தி மாணவர்களின் நலன் காக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.

ரெயில் பயணிகள் சங்கம்

இதேபோல் நாமக்கல் மாவட்ட ரெயில் பயணிகள் சங்கத்தினர் கொடுத்த மனுவில், நாமக்கல்- சேந்தமங்கலம் சாலையில் செல்லும் பஸ்கள் ரெயில் நிலைய பஸ் நிறுத்தத்தில் சரிவர நிற்பது இல்லை. இதனால் ரெயில் நிலையத்திற்கு சென்று வரும் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே அனைத்து பஸ்களும் ரெயில் நிலைய நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்