தர்மபுரி
விபத்தை ஏற்படுத்தும் வளைவு சாலையை நேர்படுத்த வேண்டும்: கலெக்டரிடம் பா.ம.க.வினர் கோரிக்கை மனு
|தர்மபுரி கிழக்கு மாவட்ட பா.ம.க செயலாளர் ரா.அரசாங்கம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கலெக்டர் சாந்தியிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் தர்மபுரியில் இருந்து ஒடசல்பட்டி கூட்ரோடு கணவாய் பகுதி வழியாக மொரப்பூர், அரூர், திருவண்ணாமலை, கடத்தூர், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. ஒடசல்பட்டி கூட்ரோடு கணவாய் பகுதியில் உள்ள வளைவான சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. இதில் பலர் இறந்துள்ளனர்.
இந்த நிலையில் தர்மபுரி-அரூர் பிரதான சாலை 4 வழிச்சாலையாக அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒடசல்பட்டி கூட்ரோடு கணவாய் பகுதியில் தின்னப்பட்டி பிரிவு சாலையில் உள்ள வளைவான சாலையை நேர்படுத்தாமல் மீண்டும் பழையபடியே ஆபத்தான நிலையில் அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலை அகலப்படுத்துவதால் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை. மேலும் விபத்துக்கள் தான் அதிகரிக்கும். எனவே ஒடசல்பட்டி கூட்ரோடு கணவாய் பகுதியில் வளைவு சாலையை நேரான சாலையாக மாற்றியமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம் என்று கூறப்பட்டிருந்தது. இதில் வி.சி.க. தொழிலாளர் முன்னனி மாநில துணை செயலாளர் சென்னகிருஷ்ணன், பா.ம.க. மாநில செயற்குழு உறுப்பினர்கள் ராமலிங்கம், வணங்காமுடி, மாநில பொதுக்குழு உறுப்பினர் மதியழகன், மாவட்ட அமைப்பு செயலாளர் சரவணன், உழவர் பேரியக்க மாவட்ட தலைவர் முத்துசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஈஸ்வரன், ஒன்றிய செயலாளர்கள் முனுசாமி, சின்னத்தம்பி, ஒன்றிய தலைவர் சின்னசாமி, மூக்கனூர் ஊராட்சி தலைவர் மோகன், நிர்வாகிகள் சக்திவேல், சொல்லின்செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.