< Back
மாநில செய்திகள்
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 71 அடியை எட்டியது
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 71 அடியை எட்டியது

தினத்தந்தி
|
26 Oct 2023 12:15 AM IST

குமரியில் மழை நீடிப்பால் பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 71 அடியை எட்டியது. எனவே ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு, மாம்பழத்துறையாறு, முக்கடல் ஆகிய அணை பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழையாகவும், சாரல் மழையாகவும் பெய்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

இதில் ஏற்கனவே சிற்றாறு அணைகளின் நீர்மட்டம் அவற்றின் வெள்ள அபாய அளவான 12 அடியைக் கடந்துள்ள நிலையில், அந்த அணைகளில் இருந்து உபரி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. மேலும் மாம்பழத்துறையாறு, முக்கடல் அணைகள் நிரம்பின. இந்தநிலையில் பெருஞ்சாணி அணையின் நீர்மட்டமும் நேற்று மதியம் வெள்ள அபாய அளவான 71 அடியை எட்டியது.

பொதுவாக வெள்ள அபாய எச்சரிக்கை என்பது ஒவ்வொரு அணையின் மொத்த நீர்மட்டத்திற்கு 6 அடிக்கு முன்னதாக விடப்படும். அதன்படி பொதுப்பணித்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பட்டுள்ளது.

அதாவது பெருஞ்சாணி அணையின் முழு கொள்ளளவு 77 அடியாக உள்ள நிலையில் தற்போது நீர்மட்டம் 71 அடியை கடந்துள்ளது. இந்த அணையில் 75 அடிக்கும் மேல் தண்ணீர் நிரம்பும் பட்சத்தில் உபரி நீர் திறக்கப்பட்டு பரளியாறு வழியாக வலியாற்றுமுகம், அருவிக்கரை, திருவடடார், மூவாற்றுமுகம், குழித்துறை வழியாக தேங்காப்பட்டணத்தில் கடலில் சென்று சேரும். எனவே பரளியாறு மற்றும் குழித்துறை தாமிரபரணியாற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருஞ்சாணி அணையை தொடர்ந்து பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டமும் வெள்ள அபாய அளவை நெருங்கி வருகிறது. இந்த அணையின் நீர்மட்டம் இன்று 42 அடியை எட்டக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே மாவட்டத்தில் நேற்றும் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் மலையோர பகுதிகளான குலசேகரம், திற்பரப்பு, பொன்மனை, களியல், திருநந்திக்கரை, மணியன்குழி, சீரோபாயின்ட் உள்ளிட்ட இடங்களில் கன மழை பெய்தது.

மேலும் செய்திகள்