கன்னியாகுமரி
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 70 அடியை எட்டியது
|குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியது. மேலும் மழையால் மாவட்டத்தில் மேலும் 8 வீடுகள் இடிந்தன.
குலசேகரம்,
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவிட்டு, விட்டு தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகள், வாய்க்கால்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மாவட்டம் முழுவதிலும் உள்ள பெரும்பாலான குளங்கள் நிரம்பி வருகின்றன. இந்தநிலையில் நேற்று காலையில் இருந்து மதியம் வரை வெயில் இருந்த நிலையில் நேற்று மதியம் திடீரென வானம் கருமேகக்கூட்டங்களால் சூழ்ந்து மப்பும்- மந்தாரமுமாக காட்சி அளித்தது.
நாகர்கோவிலில் நேற்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் பெய்யத்தொடங்கிய மழை சுமார் ¾ மணி நேரத்துக்கும் மேல் விடாமல் பெய்தது. இந்த மழையால் நாகர்கோவில் கோர்ட்டு, பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி சாலை, மீனாட்சிபுரம் ரோடு, செம்மாங்குடி ரோடு, கோட்டார் ரோடு, செட்டிகுளம் சந்திப்பு ரோடு, டென்னிசன் ரோடு, அலெக்சாண்டிரா பிரஸ் ரோடு, வடசேரி, நாகராஜா கோவில் திடல் போன்ற பகுதிகளில் மழை வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள்.
அணைகளில் நீர்மட்டம் உயர்வு
இதேபோன்று நேற்று மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இந்த மழையினால் நாகர்கோவிலில் உள்ள குமரி அணையில் மறுகால் பாய்ந்தோடியது. மழையால் பெருஞ்சாணி அணை உள்பட அனைத்து நீர் நிலைகளின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக சிற்றாறு அணைகளின் நீர்மட்டம் வெள்ள அபாய அளவான 12 அடியை கடந்ததால் கடந்த 4 நாட்களாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் 77 அடி ெகாள்ளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் வெள்ள அபாய அளவான 71 அடியை நெருங்கி வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியது. நீர்மட்டம் 71 அடியைக் கடந்தால் மறுகால் மதகுகள் திறக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
பேச்சிப்பாறை
இதே போன்று பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டமும் 40 அடியை நெருங்கியுள்ளது. இந்த அணையின் வெள்ள அபாய அளவு 42 அடியாகும். மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் அணைகளின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கூடும். இதனால் வெள்ள அபாயத்தைத் தடுக்கும் வகையில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி ஆகிய அணைகளின் மறுகால் மதகுகள் முன்கூட்டியே திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
குளச்சல்
குளச்சல் சுற்று வட்டார பகுதியில் நேற்று பிற்பகல் 3 மணி முதல் இடி மின்னலுடன் மழை பெய்தது. இதனால் காந்தி சந்திப்பு முதல் பீச் சந்திப்பு வரை சாலையை மூழ்கடித்து வெள்ளம் ஓடியது. அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமடைந்தனர். இதுபோல் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைப் பகுதிகள், குலசேகரம், திற்பரப்பு உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது
மேலும் 8 வீடுகள்
மழையின் காரணமாகவும், சிற்றாறு அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதாலும் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. இந்தநிலையில் 8-வது நாளாக அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க நேற்று தடை விதிக்கப்பட்டிருந்தது.
தொடர்மழைக்கு மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் வரை 108 வீடுகள் இடிந்து விழுந்தன. இந்தநிலையில் நேற்று முன்தினம் மேலும் 9 வீடுகள் இடிந்து விழுந்தன. அதாவது விளவங்கோடு தாலுகாவில் 4 வீடுகளும், கிள்ளியூர் தாலுகாவில் 5 வீடுகளும் இடிந்தன. இதனால் மாவட்டத்தில் மழையால் இடிந்து விழுந்த வீடுகளின் எண்ணிக்கை 117 ஆக உயர்ந்துள்ளது.