கள்ளக்குறிச்சி
மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனுக்களை தாலுகா அலுவலகங்களில் கொடுக்கலாம்
|மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனுக்களை தாலுகா அலுவலகங்களில் கொடுக்கலாம் என கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அவர் கூறியிருப்பதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று நடைபெறும் மக்கள் குறைகேட்பு கூட்டத்திற்கு நீண்ட தூரத்தில் இருந்து பல்வேறு கிராமங்களிலிருந்து மாற்றுத்திறனாளிகள் வந்து கோரிக்கை மனு கொடுக்கின்றனர். இதனால் அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே மாற்றுத்திறனாளிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்து மனு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய கோரிக்கை மனுக்களை தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள அந்தந்த தாலுகா அலுவலகங்களில் கொடுக்கலாம். அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலகம் மூலமாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கலாம்
எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு தேவையான உதவி உபகரணங்கள், இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், சக்கர நாற்காலி, காதொலி கருவி, செல்போன், வங்கி கடன், மாதாந்திர உதவித்தொகை மற்றும் இதர உதவிகள் கோரும் மனுக்களை மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, ஆதார் அட்ட, புகைப்படத்துடன் விண்ணப்பித்து பயனடையலாம். அனைத்து உதவிகளுக்கும் வருமான சான்று தேவையில்லை. எனவே இதனை அனைத்து மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.