கோர்ட்டு வளாகத்தில் தீக்குளித்த நபர் உயிரிழப்பு
|ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் சந்திரசேகர் என்பவர் நேற்று தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்திதோப்பு எம்.கே.டி. நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 45). இவர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் நேற்று ஒரு வழக்கு விசாரணைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட கோர்ட்டுக்கு வந்துள்ளார்.
கோர்ட்டு வளாகத்தில் நின்றிருந்த அவர், திடீரென தான் மறைத்து வைத்து இருந்த பெட்ரோலை எடுத்து தனது உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டார். அவரது உடலில் தீப்பற்றியது.
இதைப்பார்த்ததும் கோர்ட்டு வளாகத்தில் நின்று இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் சந்திரசேகர் உடலில் பற்றிய தீயை அணைத்தனர். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சந்திரசேகர், மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் எதற்காக தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார் என்பது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார், விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சந்திரசேகர், சிகிச்சை பலனளிக்காமல் இன்று உயிரிழந்தார்.