தேனி
அனுமதி பெற்ற கல்குவாரிகளுக்கு நடைச்சீட்டு வழங்க வேண்டும்: சங்கத்தினர் கலெக்டரிடம் மனு
|தேனி மாவட்டத்தில் அனுமதி பெற்ற கல்குவாரிகளுக்கு நடைச்சீட்டு வழங்க வேண்டும் என்று சங்கத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
தேனி மாவட்ட வைகை கல்குவாரிகள் மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் சங்க தலைவர் வெடிராமசாமி, செயலாளர் ஜெகநாதன், பொருளாளர் சின்னராஜா ஆகியோர் தலைமையில், மாநில பொது செயலாளர் முத்துகோவிந்தன், பொறுப்பாளர்கள் சன்னாசி, தனிக்கொடி, சுப்புராஜ், மனோகரன், மகேந்திரன், வேல்மணி ஆகியோர் மாவட்ட கலெக்டா் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் முரளிதரனிடம் ஒரு மனு கொடுத்தனர்.
அதில், ஆண்டிப்பட்டி, தேனி, பெரியகுளம், போடி, பாளையம் பகுதிகளில் செயல்படும் கல்குவாரிகளில், சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் சிலர் மிரட்டுகின்றனர். மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பல ஆண்டுகளாக ஏலம் முடிந்து செயல்படாமல் உள்ள அரசு புறம்போக்கு கல்குவாரிகளை மீண்டும் ஏலம் விட வேண்டும். மாவட்ட நிர்வாகத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அனுமதி பெற்ற கல்குவாரிகளுக்கு நடைச்சீட்டு வழங்க வேண்டும். இதுதொடர்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்குவாரிகள் மற்றும் கிரஷர்களில் கடந்த 2 நாட்களாக விற்பனை நிறுத்தப்பட்டு வேலை நிறுத்தம் நடைபெற்றது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.