< Back
மாநில செய்திகள்
கள் விற்பனைக்கு அனுமதி கொடுக்க அரசு மறுக்கிறது; சீமான் பேட்டி
திருநெல்வேலி
மாநில செய்திகள்

கள் விற்பனைக்கு அனுமதி கொடுக்க அரசு மறுக்கிறது; சீமான் பேட்டி

தினத்தந்தி
|
20 Jun 2023 7:40 PM GMT

டாஸ்மாக் வியாபாரம் சரிந்து விடும் என்பதற்காக கள் விற்பனைக்கு அனுமதி கொடுக்க அரசு மறுக்கிறது என்று சீமான் கூறினார்.

மாற்றத்தை நிகழ்த்த...

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் பா.ஜ.க.வை விட பெரிய கட்சி எங்கள் கட்சி தான். இங்கு அந்த கட்சி தனித்து நின்று எங்கள் கட்சியை விட அதிக ஓட்டுகள் வாங்குமா? தேர்தலை நோக்கி தான் வேலை செய்கிறேன். தற்போது ஒரு பயணம் செல்கிறேன். 3 மாதம் கழித்து மீண்டும் சுற்றுவேன். மாற்றத்தை நிகழ்த்த வேண்டும். அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கிறோம்.

கள் விற்பனை

கள் விற்பதற்கு அனுமதி கொடுத்தால் டாஸ்மாக் வியாபாரம் சரிந்து விடும் என்பதற்காக அரசு அதற்கு அனுமதி கொடுக்க மறுக்கிறது. மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. இரண்டு அரசுகளுமே கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக தான் செயல்படுகின்றன.

நமது மாநிலத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். 403 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட உத்தரபிரதேசத்தை பிரிக்க மறுக்கிறார்கள். ஏனெனில் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் ஓட்டுகள் பிரிந்து விடும் என்று நினைக்கிறார்கள். பா.ஜ.க. இன்னொரு முறை ஆட்சிக்கு வந்தால் நாடு சுடுகாடாகி விடும். நாட்டு நலன் என்ற அடிப்படையில் அனைவரும் ஒன்றுசேர வேண்டும். காங்கிரஸ் தலைமையில் மற்ற தலைவர்கள் சேர்வதற்கு நம்பிக்கை இல்லாமல் உள்ளனர். அந்தந்த மாநில கட்சிகள் வலுப்பெற்றால் தான் இந்தியாவை யார் ஆள்வது என்று ஒன்று கூடி கூட்டாட்சியை கொண்டுவர முடியும்.

நான் பணத்தை நம்பவில்லை

நான் பணத்தை நம்பவில்லை. தமிழ் இனத்தை நம்பி தேர்தலில் நிற்கிறேன். எனது கோட்பாடுகளை ஏற்பவர்களுடன் கூட்டணி வைப்பேன். ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர் தேர்தலில் நிற்பதற்கு 10 ஆண்டுகள் தடை என்ற உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பித்தால் அனைவரும் பயப்படுவார்கள். அப்போது தான் ஓட்டுக்கு பணம் கொடுப்பது நிற்கும்.

தமிழகத்திலேயே நடிகர் விஜய் தான் முதன்மையான நடிகர். அதிக சம்பளம் வாங்கக்கூடியவர். தமிழர்களுக்கு கோடிக்கணக்கான பிரச்சினைகள் இருக்கிறது. அதற்கு போராடுவதற்கு ஏராளமான தலைவர்கள் தேவைப்படுகிறார்கள். நடிகர் விஜய் அரசியலுக்கு வரட்டும், வரவேற்போம். எனக்கு யாருடைய துணையும் தேவை இல்லை. நடிகர் விஜய் தான் என்னுடன் சேருவது பற்றி முடிவு எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்