நீலகிரி
பலா மரங்களை வெட்டி அகற்ற அனுமதி
|கோத்தகிரி அருகே தனியார் எஸ்டேட்டில் பலா மரங்களை வெட்டி அகற்ற அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதனால் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டு, யானைகள் குடியிருப்புக்குள் புகும் போது மனித-வனவிலங்கு மோதல் ஏற்படும் அபாயம் உள்ளது.
கோத்தகிரி அருகே தனியார் எஸ்டேட்டில் பலா மரங்களை வெட்டி அகற்ற அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதனால் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டு, யானைகள் குடியிருப்புக்குள் புகும் போது மனித-வனவிலங்கு மோதல் ஏற்படும் அபாயம் உள்ளது.
166 பலா மரங்கள்
கோத்தகிரி அருகே மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் மாமரம் கிராமத்தில் தனியார் எஸ்டேட் நிர்வாகம் உள்ளது. அங்கு வளர்ந்துள்ள 166 பலா மரங்களை வெட்ட அனுமதி கோரி மாவட்ட நிர்வாகத்தின் மரம் வெட்ட அனுமதி வழங்கும் குழுவிடம் விண்ணப்பிக்கப்பட்டது. தொடர்ந்து வனத்துறை ஊழியர்களின் கள ஆய்வுக்கு பிறகு, கடந்த ஜூலை 30-ந் தேதி மரங்களை வெட்ட அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து அங்கு பலா மரங்களை வெட்டி அகற்றும் பணி நடந்து வருகிறது. இதனால் வன ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- மாமரம், முள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள பலா மரங்களில் காய்க்கும் பழங்களை உண்பதற்காக சீசன் நேரத்தில் ஏராளமான காட்டு யானைகள் முகாமிடுவது வழக்கம். இதனால் இப்பகுதி யானைகளின் வாழ்விடமாக உள்ளது. இந்த பழ மரங்களை வெட்டி அகற்றினால், காட்டு யானைகள் உணவு தேடி கிராமங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் புகுந்து மனித-வனவிலங்கு மோதல் ஏற்படும் அபாயம் உள்ளது.
பரிசீலனை செய்ய வேண்டும்
ஏற்கனவே முள்ளூர் பகுதியில் யானைகள் வழித்தடத்தை மறித்து தனியார் கம்பி வேலி அமைத்ததால், யானைகள் சாலையில் உலா வருகின்றன. எனவே, வனவிலங்குகள் உணவுக்காக நம்பியுள்ள மரங்களை அகற்ற வனத்துறையும், மாவட்ட நிர்வாகமும் அனுமதி வழங்கக்கூடாது. பலா மரங்களை வெட்ட அனுமதி வழங்கியதை மாவட்ட நிர்வாகம் மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து நீலகிரி வன கோட்ட அலுவலர் கவுதம் கூறுகையில், தங்கள் தோட்டத்திற்குள் காட்டு யானைகள் நுழைவதாலும், அங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ள காபி செடிகளில் விளைச்சல் குறைவதாலும் மரங்களை வெட்ட விரும்புவதாக தோட்ட உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த மரங்கள் அனைத்தும் தங்களது சொந்த நிலத்தில் எஸ்டேட் மூலம் நடப்பட்டு உள்ளன. எனவே, தனியார் நிலத்தில் உள்ள இந்த மரங்களை வெட்ட தடை இல்லை. மரம் வெட்ட அனுமதியும் பெற்று உள்ளனர். காட்டு பலா மரங்களை மட்டும் வெட்ட அனுமதி இல்லை. வன ஆர்வலர்கள் குறிப்பிடுவது போல குறிப்பிட்ட இடம் யானைகள் வழித்தடத்தில் இல்லை என்றார்.