மதுரை
பழனி போகர் சன்னதியில் வருகிற 18-ந்தேதி பூஜை நடத்த அனுமதி
|பழனி போகர் சன்னதியில் வருகிற 18-ந்தேதி பூஜை நடத்த அனுமதி அளித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி புலிப்பாணி ஆசிரமத்தை சேர்ந்த சிவானந்தா புலிப்பாணி சுவாமிகள், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
பழனி முருகன்கோவிலில் போகர் சன்னதி உள்ளது. இது, புலிப்பாணி ஆசிரமத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் போகர் ஜெயந்தி விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வருகிற 18-ந் தேதி அந்த விழா நடக்கிறது. ஆனால் இந்த ஆண்டு போகர் ஜெயந்தியை நடத்த அறநிலையத்துறை அதிகாரிகள் தடை விதித்து உள்ளனர்.
இது சட்டத்துக்கும், ஆன்மிகத்துக்கும் புறம்பானது. பழனி கோவிலில் போகர் சன்னதியில் தொன்றுதொட்டு புலிப்பாணி பாத்திர சாமிகள் முறையாக பூஜை செய்து தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். கடந்த ஆண்டுகளில் போகர் ஜெயந்தி விழா அபிஷேக பூஜைகள் நடத்தியதற்கான ஆதாரமாக வீடியோ பதிவுகள் உள்ளன. எனவே வருகிற 18-ந்தேதி அன்றும் வழக்கம் போல போகர் ஜெயந்தி பூஜையை நடத்த அனுமதிக்கும்படி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஸ்ரீமதி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, போகர் சன்னதியில் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வரும் பூஜைக்கு தடை விதிப்பது என்பது சட்டவிரோதம். ஏராளமான பக்தர்களின் எதிர்பார்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக இது அமைந்துள்ளது என தெரிவித்தார். விசாரணை முடிவில், வருகிற 18-ந்தேதி புலிப்பாணி ஆசிரமம் சார்பில் காலை 11 மணி முதல் பகல் 2 மணி வரை போகர் ஜெயந்தி விழாவை முறைப்படி நடத்த அனுமதிக்கப்படுகிறது. போகர் ஜெயந்தியின் போது, மரகதலிங்கத்திற்கும், புவனேஸ்வரி அம்மனுக்கும் வழக்கம் போல் அபிஷேகம் நடத்தவும் அனுமதி வழங்கப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.