யானைகள் வழித்தடத்தில் செங்கற்சூளைகளுக்கு அனுமதி - சுரங்கத்துறை ஆணையருக்கு ஐகோர்ட்டு கண்டனம்
|சுரங்கத்துறை ஆணையரின் உத்தரவு அடிப்படையில் தடாகம் பகுதியில் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளக் கூடாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
சென்னை,
யானைகள் வழித்தடம், யானைகள் வேட்டைத் தடுப்பு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் இன்று நீதிபதி சதீஷ்குமார், நீதிபதி பரதன் சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன.
அப்போது கோவை தடாகம் பகுதியில் செயல்பட்டு வந்த செங்கற்சூளைகளை மூடும்படி மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், அபராத தொகையில் 2 லட்ச ரூபாயை செலுத்திவிட்டு செங்கற்களை எடுத்துச் செல்லவும், செங்கற்சூளைகள் தொடர்ந்து செயல்படவும் சுரங்கத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தடாகம் பகுதியில் செங்கற்சூளைகள் தொடர்பாக ஐகோர்ட்டிலும், பசுமை தீர்ப்பாயத்திலும் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் சுரங்கத்துறை ஆணையர் எப்படி இந்த உத்தரவை பிறப்பிக்க முடியும் என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் நீதிபதிகள் தாமாக முன்வந்து இந்த வழக்கில் சுரங்கத்துறை ஆணையராக சேர்த்ததுடன் வரும் 19-ந்தேதி அவரை நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டனர். அதே போல் சுரங்கத்துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தடாகம் பகுதியில் எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளக் கூடாது என்று தெரிவித்த நீதிபதிகள், அந்த பகுதியில் செங்கற்சூளைகள் செயல்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய கோவை மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை வரும் 19-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.