< Back
மாநில செய்திகள்
குரோம்பேட்டை புத்தேரியில் இருந்து கீழ்கட்டளை ஏரிக்கு உபரிநீர் செல்ல நிரந்தர கால்வாய் - அமைச்சர் கே.என்.நேரு
சென்னை
மாநில செய்திகள்

குரோம்பேட்டை புத்தேரியில் இருந்து கீழ்கட்டளை ஏரிக்கு உபரிநீர் செல்ல நிரந்தர கால்வாய் - அமைச்சர் கே.என்.நேரு

தினத்தந்தி
|
7 Nov 2022 10:10 AM IST

குரோம்பேட்டை புத்தேரியில் இருந்து கீழ்கட்டளை ஏரிக்கு உபரிநீர் செல்ல நிரந்தர கால்வாய் அமைக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

அமைச்சர்கள் ஆய்வு

சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ள தடுப்பு பணிகளை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி. டி.ஆர்.பாலு ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலை, ராதா நகர், கணபதிபுரம் பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் குரோம்பேட்டை புத்தேரிக்கு வருகிறது. இதனால் ஏரி நிரம்பி உபரிநீர் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் தேங்குகிறது. இதனை தடுக்க புத்தேரியில் இருந்து கீழ்கட்டளை ஏரிக்கு உபரிநீரை கொண்டு செல்ல 2½ கி.மீ. தூரத்துக்கு தற்காலிகமாக கால்வாய் வெட்டப்பட்டு உள்ளது.

இந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கே.என்.நேரு பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நிரந்தர கால்வாய்

பல்லாவரம் தொகுதிக்கு உட்பட்ட புத்தேரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களின் போது குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்து நிற்கும் நிலை உள்ளது. இதனை தடுக்க ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் கீழ்கட்டளை ஏரிக்கு செல்லும் விதமாக நிரந்தர கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள வழியில் சுமார் ஒரு ஏக்கர் அளவில் ரூ.35 கோடி மதிப்புள்ள தனியார் நிலங்கள் உள்ளது. அந்த தனியார் நிலங்களை, அதன் உரிமையாளர்களுக்கு இழப்பீடு கொடுத்து கையகப்படுத்தி அவ்வழியாக கால்வாய் அமைக்கும் பட்சத்தில் குடியிருப்பு பகுதிகளில் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்காது. மற்ற பகுதிகளிலும் பொதுமக்களுக்கு நிலத்தடி நீர் கிடைக்கும். இந்த கால்வாய் பணிகள் அடுத்த ஆண்டு முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சேலையூர்

பின்னர் சேலையூர் ஐ.ஏ.எப். சாலையில் அமைக்கப்பட்டுள்ள மழை நீர் கால்வாய் பணிகள், டி.டி.கே. நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், எம்.எல்.ஏ.க்கள் இ.கருணாநிதி (பல்லாவரம்), எஸ்.ஆர்.ராஜா (தாம்பரம்), தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் கோ.காமராஜ், மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன், மாநகராட்சி செயற்பொறியாளர் முருகேசன், நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் செல்வக்குமார், உதவி செயற்பொறியாளர் வெங்கடேசன், உதவி பொறியாளர் குஜ்ராஜ், தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் செல்வக்குமார், தாம்பரம் தாசில்தார் கவிதா, மண்டல தலைவர்கள் டி.காமராஜ், இந்திரன், வே.கருணாநிதி, ஜோசப் அண்ணாதுரை, கவுன்சிலர் டி.ஆர்.கோபி மற்றும் அதிகாரிகள் உடன் வந்தனர்.

சிக்கராயபுரம்

இதேபோல் சிக்கராயபுரம் கல்குவாரியை அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பாலு எம்.பி., செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பின்னர் அமைச்சர் கே.என்.நேரு கூறும்போது, "இங்கு 130 ஏக்கர் அரசு நிலம், 80 ஏக்கர் தனியார் நிலம் உள்ளது. அவர்களின் அனுமதி பெற்று உரிய தொகையை செலுத்தி நிலத்தை கையகப்படுத்தி, 210 ஏக்கரில் சிக்கராயபுரம் கல்குவாரியை பெரிய நீர் தேக்கமாக மாற்ற பெரும் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று அனுமதி பெற்று தருவோம். இங்கிருந்து குன்றத்தூர், மாங்காடு பகுதிகளுக்கு தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படும்" என்றார்.

மேலும் செய்திகள்