< Back
மாநில செய்திகள்
பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
கரூர்
மாநில செய்திகள்

பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

தினத்தந்தி
|
18 Sept 2023 12:21 AM IST

கரூரில் பெரியார் பிறந்தநாள் விழாவையொட்டி அவரது சிலைக்கு தி.மு.க. உள்பட பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

பெரியார் பிறந்தநாள் விழா

தந்தை பெரியாரின் 145-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் திருமாநிலையூரில் உள்ள பெரியாரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏக்கள். இளங்கோ, சிவகாமசுந்தரி, மாநகர செயலாளர்கள் கனகராஜ், கோல்டு ஸ்பாட் ராஜா, அன்பரசன், சுப்பிரமணியன் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இதேபோல் திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் காளிமுத்து தலைமையில் பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், பொதுக்குழு உறுப்பினர் அன்பு, வக்கீல் ராஜசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஊர்வலம்

இதேபோல் கரூர் லைட்ஹவுஸ் கார்னில் உள்ள பெரியார் சிலைக்கு பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் தனபால் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் சனாதன ஒழிப்பு ஊர்வலம் நடத்தினர். பெரியார் சிலையில் இருந்து தொடங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று பஸ் நிலையம் அருகே முடிவடைந்தது.

நொய்யல்

வேலாயுதம்பாளையம் மலைவீதி ரவுண்டானா பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியார் சிலைக்கு திராவிடர் கழகத்தை சேர்ந்த தஞ்சை மோகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதேபோல் புகழூர் தி.மு.க. சார்பில் பெரியாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதேபோல் நொய்யல், குறுக்குச்சாலை, கோம்புப்பாளையம், குந்தாணி பாளையம், குளத்துப்பாளையம், வேட்டமங்கலம், மூலிமங்கலம், காகிதபுரம், புன்னம்சத்திரம் பகுதிகளிலும் தி.மு.க. மற்றும் திராவிடர் கழகம் சார்பில் பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

மேலும் செய்திகள்