பெரியார் பல்கலை. துணைவேந்தர் கைது - பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்
|அமைச்சராக இருந்த பொன்முடி சொல்லிக் கொடுத்துதான் இவையெல்லாம் நடந்திருக்கிறது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை,
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், விதிகளை மீறி, அரசு அனுமதியின்றி பல்கலைக்கழகத்தின் பல்வேறு பணிகளை தனக்கு சொந்தமான பெரியார் பல்கலைக்கழக தொழில்நுட்ப தொழில் முனைவோர் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை என்ற அமைப்பின் மூலம் செயல்படுத்தி நிதியை முறைகேடு செய்ததாகவும், பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் சிலரை சாதிப் பெயர் சொல்லி திட்டியதாகவும் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில், வன்கொடுமை தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெகநாதனை கைது செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் அரசு கூறியவரை பதிவாளராக நியமிக்கவில்லை என்பதற்காக சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது முகாந்திரம் இல்லாத ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமைச்சராக இருந்த பொன்முடி சொல்லிக் கொடுத்துதான் இவையெல்லாம் நடந்திருக்கிறது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-
பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் PUTER (Periyar University Technology Entreprenurship Research Foundation) என்ற ஒரு பவுண்டேஷனை துவங்குகிறார். ஆனால், இதை ஒரு கம்பெனி துவங்கியதைப் போல மக்களுக்குச் சொல்லிவிட்டனர். இது பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்படும் ஒரு கம்பெனி, அந்த கம்பெனியின் லாபத்தை யாரும் வெளியே எடுத்துபோக முடியாது. அந்த கம்பெனியின் வளர்ச்சிக்காக மட்டும்தான் அதை பயன்படுத்த வேண்டும். இதில் இயக்குனர்களாக இருக்கும் 4 பேரும் பேராசிரியர்கள்.
தனியாரிடம் இருந்து வரக்கூடிய பணத்தை எடுத்து, பெரியார் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களின் ஆற்றல் திறனை அதிகப்படுத்துவது, வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவது ஆகிய நோக்கங்களுக்காக இந்த கம்பெனியை ஆரம்பித்துள்ளனர். இதில் என்ன தவறு உள்ளது? இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் இதுபோன்ற கம்பெனிகள் உள்ளன. அந்த கம்பெனிகளுக்கு வேறு வேறு இடங்களில் இருந்து பணம் வருகிறது. அந்த பணத்தை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு பயன்படுத்துகின்றனர். இதில் எந்த தவறும் இல்லை.
துணைவேந்தரிடம் பேச சென்றபோது சாதிப் பெயர் சொல்லி திட்டிவிட்டார். எனவே, அவரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் எனக் கூறி புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், புகார் கொடுத்தவர்கள் சந்தித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ இதற்கு புறம்பானதாக இருக்கிறது. அந்த வீடியோவில், துணைவேந்தரால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பெரியார் பல்கலைக்கழகத்தின் பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் சக்திவேல், இளங்கோ என்பவருடன் வந்து துணைவேந்தரை சந்தித்துள்ளார். இருவரும் துணைவேந்தரின் கார் கதவை பிடித்து இழுத்து பிரச்சனை செய்துள்ளனர்.
அவர் உடன் வந்த இளங்கோ என்பவர்தான், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி புகார் அளித்துள்ளார். இது முகாந்திரம் இல்லாத ஒரு வழக்கு. இதெல்லாம் அமைச்சராக இருந்த பொன்முடி சொல்லிக் கொடுத்துதான் நடக்கிறது. பெரியார் பல்கலைக்கழகம் கடந்த 5 ஆண்டுகள் பதிவாளர் இல்லாமல் இயங்குகிறது. பொன்முடி ஒருவரை பதிவாளராக பணியமர்த்த வேண்டும் என அழுத்தம் கொடுக்கிறார். அதை துணைவேந்தர் ஜெகநாதன் ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்த நிலையில் கவர்னர், துணைவேந்தரிடம் நியாயமான நடைமுறைகளைப் பின்பற்றி பதிவாளரை பணியமர்த்த உத்தரவிடுகிறார். இதற்கான கூட்டம் கடந்த 6.11.2023 அன்று நடைபெற்றது. அந்த கூட்டத்துக்கு உயர் கல்வித்துறை செயலர் வரவில்லை. அவருக்குப் பதிலாக துணை செயலர் கலந்துகொண்டார். பதிவாளர் பணியிடம் குறித்து பேசும்போது காணொளி வாயிலாக உயர்கல்வித்துறை செயலர் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். இதற்கு துணைவேந்தர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுவே துணைவேந்தர் மீதான நடவடிக்கைக்கு காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.