பெரியார் பல்கலை., துணைவேந்தர் விவகாரம்: மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்ய வேண்டாம் - செல்வப்பெருந்தகை
|பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரின் பணி நீட்டிப்பை ரத்து செய்யவேண்டும் என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை ஐகோர்ட்டில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள, அரசு செயலர் விசாரணை அறிக்கையில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு, கவர்னர் ஒராண்டு பதவி நீட்டிப்பு வழங்கி இருப்பது உயர்கல்வியின் மாண்புக்கும், மரபுக்கும் எதிரானதாகும். எனவே அந்த பணி நீட்டிப்பை கவர்னர் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. துணைவேந்தரின் பணிநீட்டிப்பை ரத்து செய்ய வேண்டும். அப்போது தான் பல்கலைக்கழகத்தின் மாண்பும், துணைவேந்தர் பதவிக்கான பெருமையும் நிலைக்கும்.
உயர்கல்வித்துறை அமைச்சரின் சட்டமன்ற அறிவிப்புக்கு சவால் விடும் வண்ணம் இந்த பணி நீட்டிப்பை கவர்னர் வழங்கி இருப்பதாக கருதுகிறோம். மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்ய வேண்டாம் என கவர்னரை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.