"பெரியார் என்பது கற்சிலை அல்ல, அவர் ஒரு தத்துவம்" - நடிகர் சத்யராஜ் பேச்சு
|பெரியார் உயிருடன் இருந்தால் என் மீதே செருப்பு மாலையை போடுங்கள் என்று அவரே பெற்றுக் கொள்வார் என நடிகர் சத்யராஜ் கூறினார்.
திருச்சி,
திருச்சியில் உள்ள தந்தை பெரியார் கல்லூரி வளாகத்தில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சந்திப்பு விழா, பெரியாரின் 144-வது பிறந்தநாள் விழா, சங்கத்தின் இருபதாம் ஆண்டு துவக்க விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது;-
"என்னம்மா கண்ணு சவுக்கியமா? என்று கேட்கும் போது, பிற்படுத்தப்பட்டவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும், பெண்களும் சவுக்கியம் என்று கூற முடிகிறது என்றால் அதற்கு காரணம் தந்தை பெரியார் தான்.
பெரியார் சிலைக்கு அவமரியாதை செய்வது, செருப்பு மாலை போடுவது போன்ற செயல்களை சிலர் செய்கிறார்கள். ஆனால் பெரியார் உயிருடன் இருந்தால், நானே நேராக வந்து நிற்கிறேன், செருப்பு மாலையை என் மீது போடுங்கள் என்று அவரே பெற்றுக் கொள்வார். அப்படிப்பட்ட தைரியசாலி அவர்.
பெரியார் என்பது வெறும் கற்சிலை அல்ல. அவர் ஒரு தத்துவம், ஒரு கொள்கை, அவர் ஒரு கோட்பாடு. என்னை வேறு ஒரு நடிகருடன் ஒப்பிட்டு, 'நீ நடிப்பில் தாழ்ந்தவன்' என்றோ, படிப்பு, திறமையில் தாழ்ந்தவன் என்றோ கூறலாம். ஆனால் பிறப்பால் தாழ்ந்தவன் என்று சொல்வது என்ன நியாயம்? இதற்காக போராடியவர் தான் தந்தை பெரியார்."
இவ்வாறு நடிகர் சத்யராஜ் பேசினார்.