சேலம்
சனாதனத்தை வேரறுக்க பெரியார், அம்பேத்கர் இயக்கங்கள் ஒருங்கிணைய வேண்டும்-தொல்.திருமாவளவன் பேச்சு
|சனாதனத்தை வேரறுக்க பெரியார், அம்பேத்கர் இயக்கங்கள் ஒருங்கிணைய வேண்டும் என்று கொளத்தூரில் வீரவணக்கநாள் கூட்டத்தில் தொல். திருமாவளவன் பேசினார்.
கொளத்தூர்:
வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்
சேலம் மாவட்டம் கொளத்தூரை அடுத்த புலியூர் பிரிவு என்ற பொன்னம்மன் நினைவிடத்தில் மாவீரர் தின வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. திராவிடர் விடுதலை இயக்க தலைவர் கொளத்தூர் மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு ஆகியோர் மெழுகுவர்த்தி ஏற்றி ஈழப்போரில் உயிரிழந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் கொளத்தூர் பஸ் நிலையத்தில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். கூட்டத்தில் தொல்.திருமாவளன் பேசும் போது கூறியதாவது:-
மாவீரர் தினம், தமிழக மக்களால் மறக்க முடியாத நாள். ஈழப்போரில் உயிரிழந்த விடுதலை புலிகள் அமைப்பின் தளபதி சங்கர் நினைவை போற்றும் வகையில் மாவீரர் தினத்தை பிரபாகர் அறிவித்தார். அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் மாவீரர் தினம் தமிழர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கொளத்தூரிலும் வீரவணக்கநாள் பொதுக்கூட்டமாக நடத்தப்படுகிறது.
ஈழ விடுதலை
இந்திராகாந்திக்கு பிறகு ராஜீவ்காந்திக்கு இந்திய உளவு அமைப்பு கொடுத்த தவறான தகவல்களால் ஈழ விடுதலை மலராமல் போய் விட்டது. முள்ளிவாய்க்கால் போராட்டத்தின் போது நான் உண்ணாவிரதம் இருந்தேன். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டதால் அன்று உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டேன்.
அந்த உண்ணாவிரத போராட்டம் கூடுதலாக 2 நாட்கள் நீடித்து இருந்தால் கல்லூரி மாணவர்களின் தன்னெழுச்சி போராட்டமாக அது மாறி இருக்கும். அதுவே ஈழ விடுதலைக்கு வித்திட்டு இருக்கும் என நான் நினைக்கிறேன். இதைதெரியாமல் விடுதலை புலிகளுக்கும், திருமாவளவனுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று கேட்கிறார்கள்.
பெரியார் சிந்தனை இயக்கங்கள்
இன்றைக்கு இந்தியாவில் சனாதனத்தையும், மதத்தையும், இந்தியையும் திணிக்க பா.ஜனதா அரசு முனைப்பு காட்டி வருகிறது. பா.ஜனதா அரசு தொடர்ந்து இதே நிலையை எடுக்குமானால் தனித்தமிழகம் தான் தீர்வு என நான் கூறினேன். அதனை சங்பரிவார் அமைப்புகள் திரித்து கூறி என்னை பிரிவினைவாதி என்று கூறுகிறார்கள்.
இந்துத்துவா கொள்கைகளை செயல்படுத்த நினைக்கும் பா.ஜனதா அரசின் சனாதனத்தை வேரறுக்க பெரியாரின் சிந்தனை உள்ள இயக்கங்களும், அம்பேத்கர் சிந்தனை கொண்ட இயக்கங்களும் சேர்ந்து போராட வேண்டும்.
இவ்வாறு தொல்.திருமாவளன் பேசினார்.