< Back
மாநில செய்திகள்
பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் ஆடி திருவிழா முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் - கலெக்டர் தலைமையில் நடந்தது
சென்னை
மாநில செய்திகள்

பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் ஆடி திருவிழா முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் - கலெக்டர் தலைமையில் நடந்தது

தினத்தந்தி
|
13 July 2022 9:10 PM IST

பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் ஆடி திருவிழா முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடந்தது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் வருகின்ற 15-ந்தேதி முதல் தொடர்ந்து 14 வாரங்கள் ஆடி பெருவிழா நடைபெறுவதையொட்டி அந்த விழாவுக்காக நடைபெற்று வரும் முன்னேற்பாட்டுபணிகள், குடிநீர், உணவு ஏற்பாடுகள், மின் வசதி, போக்குவரத்து வசதி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. டி.ஜே.கோவிந்தராஜன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஜெயக்குமார், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் லட்சுமணன், உள்ளாட்சி பிரதிநிதிகள், அறநிலையத்துறை, வருவாய்த்துறை, போலீஸ்துறை, மற்றும் ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் புகழ்பெற்ற பவானி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஆடி மாதம் முதல் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இருந்து 15 வாரங்கள் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து தங்கி இருந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தி விட்டு செல்வர். இந்த கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், தங்கும் வசதி, போக்குவரத்து வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை எல்லாபுரம் ஒன்றிய குழு சார்பில் எவ்வாறு செய்து தருவது என்பது குறித்த ஆலோசனை கூட்டம் பெரியபாளையத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

இதற்கு எல்லாபுரம் ஒன்றிய குழுத்தலைவர் வடமதுரை ரமேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு துணைத்தலைவர் வக்கீல் சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் மாவட்ட உதவி இயக்குனர் ரூபேஷ் குமார் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஆடி திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, தங்கும் வசதி, போக்குவரத்து வசதி உள்ளிட்டவைகளை சிறப்பாக செய்து தர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் கேட்டுகொண்டுள்ளது. எனவே அந்த பணியை சிறப்பாக செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள், கோவில் சார்பில் அறங்காவலர் லோக மித்ரா, செயல் அலுவலர் பிரகாஷ், மேலாளர் வெங்கட், சுகாதாரத்துறை, போலீஸ்துறை, மின்துறை, போக்குவரத்து துறை, நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளும், ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்